
யுஎஸ் ஓபனில் இரண்டாவது முறை; செரீனா வில்லியம்ஸுக்குப் பிறகு வரலாற்று வெற்றி பெற்ற ஆர்யனா சபலெங்கா
செய்தி முன்னோட்டம்
ஆர்யனா சபலெங்கா, யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டார். ஆர்தர் ஆஷே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை அமண்டா அனிசிமோவாவை நேர் செட்களில் 6-3, 7-6 (3) என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை வென்றார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 34 நிமிடங்கள் நீடித்தது. ஆர்யனா சபலெங்காவின் இந்த வெற்றி, அவரது நான்காவது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். இதற்கு முன் இரண்டு ஆஸ்திரேலியன் ஓபன்களையும், தற்போது இரண்டாவது யுஎஸ் ஓபன் பட்டத்தையும் அவர் வென்றுள்ளார்.
பெருமை
பட்டம் வென்றது குறித்து பெருமை
இந்த வெற்றியின் மூலம், செரீனா வில்லியம்ஸுக்குப் பிறகு, யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பட்டத்தைத் தக்கவைத்த முதல் டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமையையும் சபலெங்கா பெற்றுள்ளார். அனிசிமோவா, இகா ஸ்வியாடெக் மற்றும் நவோமி ஒசாகா போன்ற முன்னணி விளையாட்டு வீராங்கனைகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வந்தாலும், உலகின் நம்பர் 1 வீராங்கனையான சபலெங்காவை வெல்ல முடியவில்லை. வெற்றிக்குப் பிறகு பேசிய சபலெங்கா, மற்றொரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றது மிகவும் பெருமையாக இருப்பதாகவும், இந்த சீசனில் தான் கொடுத்த போராட்டம் குறித்துத் தனக்கு மிகவும் பெருமை என்றும் தெரிவித்தார்.