அர்ஜுன் டெண்டுல்கரை தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்கு வர பிசிசிஐ அழைப்பு
இந்தியாவில் திறமையான இளம் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மூன்று வார முகாமிற்கு 20 இளம் ஆல் ரவுண்டர்களுக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது. இதில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் இடம் பெற்றுள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டில் கோவாவுக்காக விளையாடி வரும் அர்ஜுன் டெண்டுல்கர், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இடைக்காலத் தலைவர் ஷிவ் சுந்தர் தாஸ் தலைமையிலான இந்திய அணியின் தேர்வுக்குழு செயல்திறன் மற்றும் திறமை அடிப்படையில் இந்த வீரர்களை தேர்வு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அர்ஜுன் டெண்டுல்கருக்கு அழைப்பு வந்துள்ளதை கோவா கிரிக்கெட் சங்கமும் உறுதி செய்துள்ளது.
இளம் வீரர்களை பயிற்சி முகாமுக்கு அழைத்ததன் பின்னணி
இந்த ஆண்டின் பிற்பகுதியில் எமெர்ஜிங் ஆசிய கோப்பை யு-23 தொடர் நடக்க உள்ளது. மேலும் பிசிசிஐ உள்ளூர் அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் வீரர்களை கவனித்து வருகிறது. இந்நிலையில் ஆல் ரவுண்டர்களுக்கு மட்டுமான சிறப்பு முகாம் என்பது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் விவிஎஸ் லக்ஷ்மனின் யோசனை என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இளம் ஆல் ரவுண்டர்களின் திறமையை மெருகூட்டுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்படுகிறது. இதற்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் 2021இல் இந்தியாவுக்காக விளையாடியுள்ள லோயர்-ஆர்டர் பேட்டர் மற்றும் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சேத்தன் சகாரியா, ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்ட அபிஷேக் ஷர்மா உள்ளிட்ட பல வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.