லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதமடித்த இந்தியர்; ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத அன்மோல்ப்ரீத் சிங் சாதனை
பஞ்சாப் வீரர் அன்மோல்ப்ரீத் சிங் சனிக்கிழமை (டிசம்பர் 21) அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை போட்டியின்போது ஒரு இந்திய கிரிக்கெட் வீரரின் அதிவேக லிஸ்ட் ஏ சதத்தை அடித்து வரலாறு படைத்தார். அன்மோல்ப்ரீத் சிங் நரேந்திர மோடி ஸ்டேடியம் ஏ மைதானத்தில் வெறும் 35 பந்துகளில் மைல்கல்லை எட்டினார். பரோடாவுக்காக 40 பந்துகளில் சதம் அடித்த யூசுப் பதானின் 2010 சாதனையை அவர் இதில் முறியடித்தார். அன்மோல்ப்ரீத்தின் இந்த சாதனை இப்போது உலகளவில் மூன்றாவது அதிவேக சதமாக உள்ளது. ஆஸ்திரேலியாவின் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் (29 பந்துகள்) மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் (31 பந்துகள்) ஆகியோர் இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.
டாப் 5 வீரர்கள்
2015ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டி வில்லியர்ஸ் சிறப்பான ஆட்டம் மூலம் 31 பந்துகளில் சதத்தை எட்டினார். 2023 அக்டோபரில் பிரேசர்-மெக்குர்க் தெற்கு ஆஸ்திரேலியா சார்பாக தாஸ்மானியாவுக்கு எதிராக 29 பந்துகளில் சதத்தை எட்டி சர்வதேச அளவில் டி வில்லியர்ஸின் சாதனையை முறியடித்தார். இவர்களைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் அன்மோல்ப்ரீத் சிங் உள்ள நிலையில், நான்காவது இடத்தில் நியூசிலாந்து சார்பாக கோரி ஆண்டர்சன் மற்றும் சாமர்செட் அணியின் கிரஹாம் ரோஸ் 36 பந்துகளில் சதமடித்தனர். விஜய் ஹசாரே கோப்பையில் சதமடித்து சாதனை படைத்தாலும், சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2025இல் அவர் எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.