ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : இது நடந்தால் டக்வொர்த் லூயிஸ் விதியின்படி வெற்றியாளர் அறிவிக்கப்பட வாய்ப்பு!
ஐபிஎல் 2023 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியின்போது ஞாயிற்றுக்கிழமை (மே 28) மழை பெய்ததால் போட்டி திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் திங்கட்கிழமை நடக்கும் போட்டியின்போது மழையால் இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது கிடைக்கும் வானிலை அறிக்கைகளின்படி, திங்கட்கிழமை மாலையில் வானிலை சற்று மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு 10-15 கிமீ வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று கூறப்பட்டாலும், மழை பெய்யாது என்பது எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது. இதனால், மழை பெய்தால் போட்டியின் நிலை என்னாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மீண்டும் மழை பெய்து போட்டி பாதிக்கப்பட்டால் நடக்க வாய்ப்புள்ள அம்சங்கள்
மழையால் தாமதமானால் போட்டி இரவு 9:40 மணிக்கு முன் தொடங்கினால் இரு தரப்பிலும் 20 ஓவர்கள் முழுமையாக விளையாடப்படும். அதற்கு பிறகு போட்டியின் ஓவர்கள் நேரத்திற்கு ஏற்ப குறைக்கப்படும். நள்ளிரவு 12.06 மணி குறைந்தபட்சம் ஐந்து ஓவர்கள் கொண்ட போட்டியை நடத்துவதற்கான கடைசி நேரமாகும். இதுவும் முடியாவிட்டால் சூப்பர் ஓவர் முறைப்படி தலா ஒரு ஓவர் விளையாடப்படும். இதற்கான கடைசி நேரம் அதிகாலை 1.20 மணியாகும். சூப்பர் ஓவர் நடக்கவில்லை என்றால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் பட்டத்தை வெல்லும். இதற்கிடையே முதல் இன்னிங்ஸ் விளையாடி, இரண்டாவது இன்னிங்ஸின் ஐந்து ஓவர்களுக்குப் பிறகு மழை குறுக்கிட்டால், டக்வொர்த் லூயிஸ் விதியின்படி வெற்றியாளர் அறிவிக்கப்படுவர்.