Asian Games : இந்திய கிரிக்கெட் அணிக்கு தங்கம் கொடுத்தது முறையல்ல; ஆப்கான் வீரர் ஏமாற்றம்
ஆப்கான் கிரிக்கெட் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஃபரீத் மாலிக், ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கெட்டில் இந்தியா தங்கம் வென்றதை விமர்சித்துள்ளார். சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில், ஆப்கானிஸ்தான் இந்திய அணியை எதிர்கொண்டது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 5 விக்கெட்டுகளை 112 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டி மழையால் நிறுத்தப்பட்டது. தொடர்ந்த மழை பெய்ததால், போட்டி ரத்து செய்யப்பட்டு, ஐசிசி தரவரிசை அடிப்படையில் முன்னிலையில் உள்ள இந்தியாவுக்கு தங்கமும், ஆப்கானிஸ்தான் அணிக்கு வெள்ளியும் வழங்கப்பட்டது. கடந்த 2010 மற்றும் 2014லும் ஆப்கானிஸ்தான் வெள்ளி வென்றிருந்தது. 2018 போட்டியில் கிரிக்கெட் சேர்க்கபபடவில்லை.
மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டதால் ஆப்கான் கிரிக்கெட் அணி ஏமாற்றம்
இந்தியாவில் நடந்து வரும் ஒருநாள் உலகக்கோப்பையில், ஆப்கான் கிரிக்கெட் அணியின் ரிசர்வ் வீரர்களில் ஒருவராக இடம் பெற்றுள்ள ஃபரீத் மாலிக்கால் இந்திய கிரிக்கெட் அணிக்கு தங்கம் வழங்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆசிய விளையாட்டுப் போட்டியின் அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 ஓவர்கள் பந்துவீசி 15 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அந்த அணி வெற்றி பெற முக்கிய காரணமாக மாலிக் திகழ்ந்தார். இதனால் இறுதிப்போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு ஆப்கானிஸ்தான் வரலாற்றில் முதல் தங்கத்தை பெற்று விடலாம் என நம்பிக்கொண்டிருந்த அவருக்கு மழை ஏமாற்றத்தைக் கொடுத்தது. இறுதிப்போட்டி கிடைப்பட்டது குறித்து பேசிய அவர், "ஆட்டம் கைவிடப்பட்டதால் தங்கம் பகிரப்பட்டிருக்க வேண்டும். தரவரிசையின் அடிப்படையில் விருது வழங்குவது சிறந்தது அல்ல." என்று கூறினார்.