பார்டர் கவாஸ்கர் டிராபி 2வது டெஸ்ட்: மிட்செல் ஸ்டார்க் அபார பந்துவீச்சு; 180 ரன்களுக்கு சுருண்டது இந்தியா
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே, அடிலெய்டு ஓவலில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியின் இரண்டாவது போட்டியில், இந்தியா முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு சுருண்டது. முன்னதாக, பகலிரவு ஆட்டமாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கிய நிலையில், ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். இதன் மூலம், சுனில் கவாஸ்கர், சுதிர் நாயக், டபிள்யூ.வி.ராமன், சிவசுந்தர் தாஸ், வாசிம் ஜாபர் மற்றும் கே.எல்.ராகுல் வரிசையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே டக்கவுட் ஆன ஏழாவது வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார்.
இந்திய அணியின் சொதப்பல் பேட்டிங்
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பிறகு ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல்-ஷுப்மன் கில் நிதானமாக ஆடி ரன் சேர்த்தாலும், 69 ரன்களில் பிரிந்தது. அதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், இறுதியில் 44.1 ஓவரில் 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லோயர் ஆர்டரில் களமிறங்கி அணியில் ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோராக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் சேர்த்தார். இந்த டெஸ்ட் கிரிக்கெட் இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாட் கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலண்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.