அபுதாபி மாஸ்டர்ஸ் மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் பதக்கம் வென்றது இந்தியா
இந்திய மகளிர் பேட்மிண்டன் இரட்டையர் ஜோடியான அஷ்வினி பொன்னப்பா-தனிஷா கிராஸ்டோ ஆகியோர் அபுதாபி மாஸ்டர்ஸ் சூப்பர் 100 இறுதிப்போட்டியில் டென்மார்க்கின் ஜூலி ஃபின்னே-இப்சென் மற்றும் மாய் சரோவை வீழ்த்தி பட்டம் வென்றனர். 58 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் 21-16, 16-21, 21-8 என்ற புள்ளிக்கணக்கில் பொன்னப்பா-கிராஸ்டோ ஜோடி மூன்று ஆட்டங்களில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக, முதல் சுற்றில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஃபரா அல்ஹாஜி மற்றும் கதீர் அலி அல்தாஹ்ரியை எதிர்கொண்ட இந்திய ஜோடி 21-3, 21-3 என்ற கணக்கில் அரையிறுதிக்கு முன்னேறினர். அரையிறுதியில் சகநாட்டு சிக்கி ரெட்டி மற்றும் ஆரத்தி சாரா சுனில் ஜோடியை எதிர்கொண்ட பொன்னப்பா-கிராஸ்டோ ஜோடி 21-16, 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற உன்னதி ஹூடா
மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் உன்னதி ஹூடா சாமியா இமாத் ஃபரூக்கியை எதிர்கொண்டார். 16 வயதான உன்னதி 20 வயதான சாமியாவை 21-16, 22-20 என்ற கணக்கில் தோற்கடித்து தனது தொழில் வாழ்க்கையின் இரண்டாவது சூப்பர் 100 பட்டத்தை வென்றார். உன்னதி போட்டி முழுவதும் அபாரமான ஃபார்மில் இருந்தார் மற்றும் அரையிறுதியில் முதல்நிலை வீரரான தெட் ஹட்டர் துஜாரை 21-18, 21-12 என்ற கணக்கில் வென்றார். இதற்கிடையே ஆடவர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி வெறுங்கையுடன் திரும்பியது. ஆடவர் ஒற்றையர் பிரிவில், கிரண் ஜார்ஜ் மற்றும் ரகு மாரிஸ்வாமி அரையிறுதிக்கு அப்பால் முன்னேறத் தவறினர். அதே நேரத்தில் ஆண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் அணிகள் காலிறுதியில் வெளியேறின.