LOADING...
ஐபிஎல் 2026: ரோஹித் மற்றும் சஞ்சு சாம்சன் வரிசையில் அபிஷேக் ஷர்மா! டக் அவுட்டில் மோசமான சாதனை
ரோஹித் மற்றும் சஞ்சு சாம்சன் வரிசையில் அபிஷேக் ஷர்மா மோசமான சாதனை

ஐபிஎல் 2026: ரோஹித் மற்றும் சஞ்சு சாம்சன் வரிசையில் அபிஷேக் ஷர்மா! டக் அவுட்டில் மோசமான சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Apr 05, 2026
05:59 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2026இன் 10வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணிக்குத் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா ஒரு மிகப்பெரிய ஏமாற்றத்தைத் தந்தார். லக்னோ அணியின் நட்சத்திரப் பந்துவீச்சாளர் முகமது ஷமி வீசிய பந்தில், எதிர்கொண்ட இரண்டாவது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் அபிஷேக் டக் அவுட் ஆகி வெளியேறினார். நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய மூன்று இன்னிங்ஸ்களில் அவர் வெறும் 55 ரன்கள் மட்டுமே எடுத்துத் தனது மோசமான ஃபார்மைத் தொடர்ந்து வருகிறார்.

சாதனை சமன்

ரோஹித் மற்றும் சஞ்சு சாம்சனின் சாதனையைச் சமன் செய்த அபிஷேக்

இந்த டக் அவுட் மூலம் அபிஷேக் சர்மா ஒரு விரும்பத்தகாத வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். ஒரு காலண்டர் ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் அதிக முறை பூஜ்ஜிய ரன்களில் ஆட்டமிழந்த இந்திய வீரர்களின் பட்டியலில் அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 2026 ஆம் ஆண்டில் இதுவரை 6 முறை டி20 போட்டிகளில் அவர் டக் அவுட் ஆகியுள்ளார். இதற்கு முன்பு 2018இல் ரோஹித் சர்மாவும், 2024இல் சஞ்சு சாம்சனும் தலா 6 முறை ஒரு ஆண்டில் டக் அவுட் ஆகியிருந்ததே இந்திய வீரர்களில் அதிகபட்சமாக இருந்தது. தற்போது அந்தப் பட்டியலில் இளம் வீரர் அபிஷேக் ஷர்மாவும் இணைந்துள்ளார்.

தொடர் சறுக்கல்

டி20 உலகக்கோப்பை முதல் ஐபிஎல் வரை நீடிக்கும் சறுக்கல்

உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனாகக் கருதப்படும் அபிஷேக் ஷர்மாவுக்கு இந்த 2026 ஆம் ஆண்டு ஒரு சவாலான ஆண்டாகவே இருந்து வருகிறது. அண்மையில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் 8 இன்னிங்ஸ்களில் 141 ரன்கள் மட்டுமே எடுத்த அவர், அந்தத் தொடரைத் தொடர்ச்சியாக மூன்று டக் அவுட்களுடன் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டில் இதுவரை 16 டி20 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 378 ரன்களைக் குவித்துள்ளார். இதில் நான்கு அரைசதங்கள் மற்றும் 195க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட் இருந்தாலும், தொடர்ச்சியான விக்கெட் இழப்புகள் அவரது ஆட்டத்தின் மீதான விமர்சனங்களை அதிகரித்துள்ளன.

Advertisement

போட்டி நிலவரம்

அணிகளில் செய்யப்பட்ட மாற்றங்களும் போட்டி நிலவரமும்

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை இடைக்காலக் கேப்டனாக இஷான் கிஷன் வழிநடத்தினார். அணியில் ஹர்ஷல் படேல் மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். மறுபுறம் லக்னோ அணியில் ஆண்ட்ரிச் நார்ட்ஜேவுக்குப் பதிலாக மணிமாறன் சித்தார்த் களமிறக்கப்பட்டார். ஆர்சிபி அணியிடம் தோல்வியடைந்து, பின்னர் கொல்கத்தா அணியை வீழ்த்திய உத்வேகத்துடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு, அபிஷேக்கின் இந்த ஆரம்பக்கட்ட விக்கெட் ஒரு பின்னடைவாக அமைந்தது. தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியைத் தூக்கி நிறுத்த வேண்டிய அபிஷேக், வரும் போட்டிகளில் தனது தவறுகளைச் சரிசெய்து மீண்டும் ஃபார்முக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement