இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்; ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் அணியில் சேர்ப்பு
டிசம்பர் 19 அன்று நடந்த இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்தார். இதையடுத்து, விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. காயம் காரணமாக தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் எஞ்சிய போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள ருதுராஜ், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மருத்துவ குழுவினரின் கண்காணிப்பில் சிகிச்சை பெற உள்ளார். இந்நிலையில், அவருக்கு பதிலாக, தமிழக பூர்வீகத்தைக் கொண்டவரும், பெங்கால் அணிக்காக விளையாடி வருபவருமான அபிமன்யு ஈஸ்வரனை மாற்று வீரராக பிசிசிஐ அணியில் சேர்த்துள்ளது.
அபிமன்யு ஈஸவரனின் செயல்திறன்
ருதுராஜைப் போலவே, அபிமன்யுவும் ஒரு சிறந்த முதல்தர சாதனையைக் கொண்ட ஒரு தொடக்க ஆட்டக்காரர் ஆவார். பெங்கால் அணிக்காக விளையாடும் வலது கை ஆட்டக்காரரான அவர், ஏற்கனவே தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்தியா ஏ அணியில் ஒரு பகுதியாக இருந்தார். இப்போது இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதன் மூலம், சர்வதேச அரங்கில் அறிமுகமாகும் வாய்ப்பை பெற்றுள்ளார். எனினும், ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற பல வீரர்கள் இருப்பதால், விளையாடும் லெவனில் இடம்பெற வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, கடந்த பத்தாண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற தொடர்ந்து போராடி வரும் ஈஸ்வரன், முதல்தர கிரிக்கெட்டில் 22 சதங்கள் மற்றும் 26 அரைசதங்களுடன் 52க்கு மேல் சராசரியைக் கொண்டுள்ளார்.