'15 ஆண்டுகளாக புவனேஸ்வரை எதிர்கொள்ள தடுமாறினேன்' : ஆரோன் ஃபின்ச்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்தியாவின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரை எதிர்கொள்ள மிகவும் சிரமப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பிப்ரவரியில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வை அறிவித்த ஆரோன் ஃபின்ச், ஆஸ்திரேலியாவின் ஒயிட் பால் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் ஆவார். தனது அட்டாக்கிங் திறனுக்காக புகழப்படும் பேட்டர் ஆரோன் ஃபின்ச், உலகெங்கிலும் உள்ள வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எப்போதும் அச்சுறுத்தலாகவே இருந்துள்ளார். ஆனால், புவனேஷ்வர் குமார் மட்டும் மைதானத்தில் அவருக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டுள்ளார். ஒரு கேள்வி மற்றும் பதில் அமர்வில் பதிலளித்த ஃபின்ச், 15 ஆண்டுகள் புவனேஸ்வர் குமாரை எதிர்கொள்ள தடுமாறினேன் என வெளிப்படையாக கூறியுள்ளார்.
7 முறை ஆரோன் ஃபின்ச்சை ஆட்டமிழக்கச் செய்த புவனேஸ்வர் குமார்
புவனேஷ்வர் குமார் ஃபின்ச்சை மொத்தம் ஏழு முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இதில் நான்கு முறை 2019இல் இந்தியாவின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது ஒரே தொடரில் ஃபின்ச்சை வீழ்த்தியுள்ளார். ஜனவரி 2011இல் இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் சர்வதேச அரங்கில் அறிமுகமான ஃபின்ச், 5 டெஸ்ட், 146 ஒருநாள் போட்டிகள் மற்றும் 103 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், ஒட்டுமொத்தமாக 17 ஒருநாள் சதங்கள் மற்றும் இரண்டு டி20 சதங்களுடன் மொத்தமாக 8,804 ரன்கள் குவித்தார். 76 டி20 போட்டிகளிலும், 55 ஒருநாள் போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஃபின்ச், 2022 டி20 உலகக்கோப்பைக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் முழு ஓய்வை அறிவித்தார்.