Loading...
கால்பந்து வரலாற்றிலேயே முதல்முறை; ஒரே ஆட்டத்தில் 51 ரெட் கார்டு; பிரேசிலில் நடந்த கூத்து
ஒரே கால்பந்து ஆட்டத்தில் 51 ரெட் கார்டு

கால்பந்து வரலாற்றிலேயே முதல்முறை; ஒரே ஆட்டத்தில் 51 ரெட் கார்டு; பிரேசிலில் நடந்த கூத்து

எழுதியவர் Sekar Chinnappan
Nov 05, 2026
12:32 pm

செய்தி முன்னோட்டம்

பிரேசிலில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டியில் 60 நிமிடங்களுக்குள்ளாகவே மொத்தம் 51 சிவப்பு அட்டைகள் (ரெட் கார்டு) காண்பிக்கப்பட்டு ஆட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது. மினாஸ் ஜெரைஸ் மாகாணத்தில் உள்ள எஸ்டாடியோ பார்க் டூ சாபியா மைதானத்தில் மாமோரே மற்றும் உபெர்லேண்டியா அணிகளுக்கு இடையே இப்போட்டி நடைபெற்றது. ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் மாமோரே அணி தனது 3-வது கோலை அடித்து முன்னிலை பெற்றபோது, ஸ்ட்ரைக்கர் தாவீ எதிரணியின் பெஞ்சைப் பார்த்து எள்ளி நகையாடும் வகையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் மைதானத்தில் பெரும் கலவரம் வெடித்தது.

கோல்கீப்பிங் பயிற்சியாளர்

மைதானத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய கோல்கீப்பிங் பயிற்சியாளர்

மாமோரே வீரரின் கொண்டாட்டத்தால் ஆத்திரமடைந்த உபெர்லேண்டியா அணியின் கோல்கீப்பிங் பயிற்சியாளர் பாவ்லோ செர்ஜியோ டயஸ் தோஸ் சாண்டோஸ், உடனடியாக மைதானத்திற்குள் ஓடிவந்து அந்த வீரரைத் தாக்க முயன்றார்.

இதைத் தொடர்ந்து இரு அணிகளின் தொழில்நுட்பக் குழுவினர், மாற்று வீரர்கள் மற்றும் வாரிய உறுப்பினர்கள் என அனைவரும் மைதானத்திற்குள் புகுந்து ஒருவரையொருவர் பலமாகத் தாக்கிக் கொண்டனர்.

இக்கடுமையான மோதலைக் கட்டுப்படுத்த முடியாமல் நடுவர் மற்றும் போட்டி அதிகாரிகள் திணறியதால் மைதானத்தில் பெரும் குழப்பமும் வன்முறையும் நீடித்தது.

ராணுவப் போலீஸ் நடவடிக்கை

நாற்காலிகள் மற்றும் ஸ்ட்ரெச்சர்களால் தாக்குதல்

இக்கலவரத்தில் மைதானத்தில் இருந்த 6 பந்து பொறுக்கிப் போடும் சிறுவர்களும் இணைந்து கொண்டு மாமோரே அணி ஊழியர்களை நாற்காலிகள் மற்றும் ஸ்ட்ரெச்சர்களைக் கொண்டு தாக்கியதாக நடுவர் ஃபெர்னாண்டோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் இரு அணிகளின் வீரர்களும் எதிரணியின் உடை மாற்றும் அறைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

மைதானத்தில் வன்முறை எல்லை மீறி சென்றதைத் தொடர்ந்து சூழ்நிலையைக் கட்டுப்படுத்தவும் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் உள்ளூர் ராணுவப் போலீஸார் மைதானத்திற்கு விரைந்து வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ADVERTISEMENT

கின்னஸ் சாதனை

வரலாற்றில் 51 சிவப்பு அட்டைகள் மற்றும் உடைந்த கின்னஸ் உலக சாதனை

கலவரத்திற்கு முன்பாகவே 3 வீரர்கள் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்ட நிலையில், மோதலுக்குப் பிறகு மேலும் 48 பேருக்கு நடுவர் சிவப்பு அட்டை வழங்கினார்.

இதில் 43 வீரர்கள், 8 ஆதரவுப் பணியாளர்கள் மற்றும் 2 வாரிய உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 51 பேருக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டதால் ஆட்டம் 60 நிமிடங்களுக்குள்ளாகவே கைவிடப்பட்டது.

இதன் மூலம் 2011-ல் அர்ஜென்டினா லீக் போட்டியில் 36 சிவப்பு அட்டைகள் வழங்கப்பட்டதே சாதனையாக இருந்த நிலையில், இச்சம்பவம் உலக கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளது.

ADVERTISEMENT