IND vs IRE 3வது டி20 போட்டி மழையால் ரத்து; 2-0 என தொடரை வென்றது இந்தியா
இடைவிடாத மழை காரணமாக புதன்கிழமை (ஆகஸ்ட் 24) நடக்க திட்டமிட்டிருந்த அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இந்தியாவின் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த போட்டி நடந்து இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால், டி20 வரலாற்றில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளை கொண்ட தொடர்களில் அதிக முறை எதிரணியை ஒயிட்வாஷ் செய்த அணி என்ற சாதனையை இந்தியா பெற்றிருக்கும். மழையால், அந்த சாதனையை இந்தியா படைக்க முடியாவிட்டாலும், தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. மேலும், இந்தியாவும் அயர்லாந்தும் மொத்தம் ஏழு டி20 போட்டிகளில் இதுவரை நேருக்கு நேர் விளையாடியுள்ள நிலையில், இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியைத் தழுவாத சாதனையையும் தக்கவைத்துள்ளது.
தொடர் நாயகனாக ஜஸ்ப்ரீத் பும்ரா தேர்வு
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பேட்டர் ருதுராஜ் கெய்க்வாட் இந்த தொடரில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் இரண்டு டி20 போட்டிகளில் 77 ரன்கள் எடுத்தார். இதில் 2வது டி20யில் 43 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். டி20 கிரிக்கெட்டில் ருதுராஜ் கெய்க்வாட் வெளிநாட்டில் எடுத்த முதல் அரைசதம் இதுவாகும். இதற்கிடையே, இந்த தொடரின் முதல் மற்றும் இரண்டாவது டி20 போட்டிகளில் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், தொடர்நாயகன் விருதை ஜஸ்ப்ரீத் பும்ரா வென்றார். மேலும், இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் மூன்றாவது அதிக விக்கெட்டுகளை (74) வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் பும்ரா பெற்றார்.