ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மூன்று இந்திய பேட்டர்கள்
ஆசிய கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றில், நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் குறைவான ஸ்கோரை டிஃபெண்டு செய்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இந்தியா. நேற்றைய போட்டியில் இரண்டு அணி பேட்டர்களிலும், ரோகித் ஷர்மா மட்டுமே அதிகபட்சமாக 53 ரன்களைக் குவித்து அரைசதம் கடந்திருந்தார். ஸ்பின்னுக்கு சாதகமான தளத்தில் பிற பேட்டர்கள் அனைவரும் 50 ரன்களுக்குள்ளாகவே ஆட்டமிழந்தனர். இந்நிலையில், ஐசிசியின் ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் ஒரு இடம் முன்னேறி ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருக்கிறார் ரோகித் ஷர்மா. அவருக்கு முன்னதாக ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறார் விராட் கோலி.
அசத்தும் சுப்மன் கில்:
நடப்பு ஆசிய கோப்பைத் தொடரில் நேபாளம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக இரண்டு அரைசதங்கள் அடித்திருக்கும் சுப்மன் கில் தன்னுடைய கிரிக்கெட் கரியரிலேயே மிகச்சிறப்பாக ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இரண்டாமிடத்தைப் பிடித்திருக்கிறார். அவருக்கு முன்னதாக முதலிடத்தில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மட்டுமே இருக்கிறார். நான்கரை ஆண்டுகளுக்குப் பின்பு, ஒருநாள் தரவரிசையில் மூன்று இந்திய பேட்டர்கள் முதல் 10 இடங்களுக்குள் இடம்படித்திருக்கின்றனர். கடைசியாக 2019ம் ஆண்டில் தான் ஷிகர் தவான், ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒருநாள் தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.