
இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தசுன் ஷனகா விலக முடிவு எனத் தகவல்
செய்தி முன்னோட்டம்
தனது அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 12 வெற்றிகளை பெற்றுக் கொடுத்த இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் தசுன் ஷனகா கேப்டன் பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அணிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் வெற்றிகளை பெற்றுக் கொடுத்தாலும், சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் ஷனகா தலைமையிலான இலங்கை இந்தியாவிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதற்கிடையே, கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு ஆல்ரவுண்டர் ஷனகாவின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு திறனும் கடுமையாக சரிவை சந்தித்துள்ளது. இதுவும் அவர் பதவியிலிருந்து விலகுவதற்கான காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.
Dasun Shanaka plans to give up captaincy
ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக புதிய கேப்டன் நியமனம்
தசுன் ஷனகா கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவது உறுதியானால், அணியின் புதிய ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக வனிந்து ஹசரங்க நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. விரைவில் இந்தியாவில் தொடங்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பையில் பங்குபெற அந்நாட்டு அணி இந்தியா கிளம்பும் முன் இந்த நியமனம் இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது. இது குறித்து பேசியுள்ள கிரிக்கெட் நிபுணர் ஹர்ஷா போக்லே, "இலங்கை அணியின் கேப்டன் பதவியில் இருந்து தசுன் ஷனக விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை விலக யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று நம்புகிறேன். அவர் ஒரு நல்ல மனிதர் மற்றும் சிறந்த தலைவர். ஆனால் கேப்டன் பொறுப்புக்காக தனது திறனை இழக்க முடியாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்." எனக் கூறியுள்ளார்.