பிரபலங்களை வைத்து AI உதவியுடன் உருவாக்கப்பட்டு வைரலான ஸோமாட்டோவின் நகைச்சுவைக் காணொளி
இந்தியாவில் உணவு டெலிவரி சேவைக்கு மட்டுமல்லாது, சமூக வலைத்தளங்களில் தங்கள் தளத்தை சந்தைப்படுத்துவதற்காக படைப்பாற்றல் மிக்க நகைச்சுவையான பதிவுகளை பதிவிடுவதிலும் புகழ் பெற்ற நிறுவனம் ஸோமாட்டோ. தற்போது இன்ஸ்டாகிராமில் எலான் மஸ்க், லியோனால் மெஸ்ஸி மற்றும் லியனார்டோ டி காப்ரியோ ஆகியோரின் புகைப்படங்களை வைத்து செயற்கை தொழில்நுட்பக் கருவிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட நகைச்சுவையான பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறது அந்நிறுவனம். ஸோமாட்டோ நிறுவனத்தின் இந்தப் பதிவு சமூக வலைத்தளங்கம் பயனாளர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பிரலங்களின் புகைப்படங்களை வைத்து AI கருவியைப் பயன்படுத்தி உருமாற்றி, தங்களுடைய விளம்பரத்திற்காக நகைச்சுவையாகப் பயன்படுத்திக் வரும் இந்த போக்கு குறித்தும் சிலர் கேள்வியும் எழுப்பியிருக்கிறார்கள்.
ஸோமாட்டோ நிறுவனத்தின் நகைச்சுவைப் பதிவு:
ஸோமாட்டோ நிறுவனம் இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்ட நகைச்சுவைப் பதிவு ஒரு காணொளியாக விரிகிறது. அதில், முதலில் உலக பணக்காரர்களுள் ஒருவரான எலான் மஸ்க், வட இந்திய சாலையோர உணவுப் பண்டமான சாட்டை தயாரிக்கும் வகையில் இடம் பெற்றிருக்கிறது. அதனைத் தொடர்ந்து, பிரபல கால்பந்து வீரரான லியோனால் மெஸ்ஸி, பிரியாணியை பரிமாறுதைப் போல் காட்டப்படுகிறது, அதனைத் தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகரான லியானார்டோ டி காப்ரியோ, சாலையோர தேநீர் கடையில் தேநீர் தயாரிப்பது போல உருவாக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட, இந்திய தெருக்களில் உலக பிரபலங்கள் பலர் ஹோலி கொண்டாடப்படுவது போலான AI கருவியால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது குறிப்பிடத்தக்கது.