பயனாளர்கள் 'ஆட்பிளாக்கர்'களைப் பயன்படுத்துவதைத் தடுக்க யூடியூபின் புதிய திட்டம்
யூடியூபின் வருவாய் மற்றும் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பவை விளம்பரங்கள். யூடியூப் மட்டுமல்லாது, உலகமெங்கும் இருந்து யூடியூபில் காணொளிகளை வெளியிட்டு வரும் யூடியூப் பயனாளர்களுக்கும் முக்கிய வருவாய் மூலமாக இருப்பது யூடியூபில் காட்டப்படும் விளம்பரங்கள் தான். யூடியூப் பார்வையாளர்கள் சிலர் இந்த விளம்பரங்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பதற்காக மூன்றாம் தரப்பு ஆட்பிளாக்கர்களைப் (Ad blocker) பயன்படுத்துவார்கள். இனி, இப்படி ஆட்பிளாக்கர்களைப் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக கூகுளின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். "விளம்பரங்கள் இல்லாமல் காணொளிகளைப் பார்க்க வேண்டும் என்றால், அவர்கள் யூடியூப் ப்ரீமியம் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்", எனத் தெரிவித்திருக்கிறார் அவர்.
நடவடிக்கையை கடுமையாக்கும் யூடியூப்:
ஆட்பிளாக்கர்கள், விளம்பர வருவாயை மட்டுமல்லாது யூடியூப் ப்ரீமியம் வருவாயையும் சேர்த்து பாதிப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கிறது யூடியூப் நிறுவனம். இனி, யூடியூப் தளத்தில் பயனாளர்கள் ஆட்பிளாக்கர்களைப் பயன்படுத்தினால், ப்ரீமியம் வசதிக்கு சந்தா செய்யவோ அல்லது அட்பிளாக்கர்களை நீக்கவோ கோரும் எச்சரிக்கைப் பக்கத்திற்கு பயனாளர்களை யூடியூப் தளம் இட்டுச்செல்லும். இந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து ஆட்பிளாக்கர்களைப் பயன்படுத்தும் பயாளர்கள் யூடியூபில் காணொளிகளைப் பார்க்க முடியாத வகையில் முடக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாதத்திற்கு ரூ.129 விலையில் ப்ரீமியம் திட்டத்தை இந்திய பயனாளர்களுக்கு அளித்து வருகிறது யூடியூப் நிறுவனம். ப்ரீமியம் திட்டத்தில், விளம்பரங்கள் நீக்கப்படுவது மட்டுமல்லாது, இலவச டவுன்லோடு மற்றும் யூடியூப் மியூசிக் ப்ரீமியம் ஆகிய வசதிகளும் பயனாளர்களுக்கு வழங்கப்படுகிறது.