தவறுதலாக பலரின் சேனல்கள் மற்றும் கணக்குகளை முடக்கியது யூடியூப்; விரைவில் மீட்டெடுப்பதாக அறிக்கை
யூடியூப் அதன் ஸ்பேம், ஏமாற்றும் நடைமுறைகள் மற்றும் மோசடிக் கொள்கையை மீறியதாக பல்வேறு சேனல்களை சமீபத்தில் நீக்கியது மற்றும் கணக்குகளைத் தடை செய்தது. யூடியூபின் இந்த தடை நடவடிக்கை வீடியோக்களைப் பதிவேற்றாத பல்வேறு பயனர்களையும் பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தடையால் பாதிக்கப்பட்ட பயனர்கள் தங்கள் யூடியூப் கணக்குகளுக்கான அணுகலை இழக்க வழிவகுத்தது. மேலும், அவர்களால் வீடியோக்களைப் பார்க்கவோ அல்லது யூடியூப் இசையைக் கேட்கவோ இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், பணம் செலுத்தி யூடியூப் சேவையைப் பெறும் பிரீமியம் சந்தாதாரர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். தடையால் அவர்கள் தங்களுடைய பிளேலிஸ்ட்கள் மற்றும் பிற சேமித்த உள்ளடக்கங்களை பயன்படுத்த முடியவில்லை.
தவறை ஒப்புக்கொண்டது யூடியூப்
பயனர்கள் தங்கள் கணக்குத் தடைகள் மற்றும் சேனல்களை அகற்றுவது குறித்து மின்னஞ்சல்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது மற்றும் பலர் அணுகல் இழப்பால் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர். சில பயனர்கள் தடைகளை மேல்முறையீடு செய்து வெற்றிகரமாக மீட்டுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், மேல்முறையீட்டிற்குப் பிறகு பயனர்கள் தங்கள் பிளேலிஸ்ட்களைப் பார்க்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே, யூடியூப் தவறு நடந்துள்ளதை ஒப்புக் கொண்டு, பாதிக்கப்பட்ட சேனல்களை மீட்டெடுக்கவும், பணம் செலுத்திய யூடியூப் டிவி, யூடியூப் பிரீமியம் மற்றும் யூடியூப் மியூசிக் சந்தாக்களுக்கான அணுகலை மீட்டெடுக்கவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. மீட்டெடுக்கப்பட்ட ஆனால் பிளேலிஸ்ட்கள் இல்லாதவர்களின் உள்ளடக்கம் விரைவில் மீட்டமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.