இந்திய அரசியல் தலைவர்களின் கிரே செக்மார்க்கை நீக்கிய எக்ஸ் (ட்விட்டர்), ஏன்?
இந்தியாவில் உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உட்பட பல்வேறு பாஜக தலைவர்களின் எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்) பக்கத்தில் உள்ள கிரே செக்மார்க்கை நீக்கியிருக்கிறது அந்நிறுவனம். பயனர்களுக்கு வழங்கப்படும் ப்ளூ செக்மார்க்கைப் போல, அரசியல் தலைவர்களுக்கு கிரே செக்மார்க் வழங்கப்படுகிறது. யோகி ஆதித்யநாத் உட்பட, ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கத்தார், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான், கோவா முதலமைச்சர் பிரமோத் சவாந்த் மற்றும் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா ஆகியோரது கிரே செக்மார்க்கும், அவர்களது எக்ஸ் கணக்கில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. இவர்களது கணக்குகளைத் தவிர, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-ன் கோல்டன் செக்மார்க்கையும், அதன் பக்கத்தில் இருந்து நீக்கியிருக்கிறது எக்ஸ்.
ஏன் இந்திய அரசியல் தலைவர்களின் செக்மார்க்கை நீக்கியிருக்கிறது எக்ஸ்?
நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி. இந்தப் பிரச்சாரத்தின் கீழ், இந்திய குடிமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியினை ஏற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதே போல, அரசியல் தலைவர்கள் இந்தப் பிரச்சாரத்தின் கீழ் தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் தேசிய கொடியினை ப்ரொஃபைல் படமாக மாற்றியிருக்கிறார்கள். எக்ஸ் தளத்தின் விதிமுறைகளின் படி, வெரிஃபை செய்யப்பட்ட கணக்குகள் தங்களுடைய பெயர் மற்றும் ப்ரொஃபைல் புகைப்படத்தை மாற்றினால், அதுகுரித்து விரிவான ரிவ்யூ செய்த பிறகே மீண்டும் செக்மார்க்கை வழங்கும். தற்போது அதன் பொருட்டே மேற்கூறிய தலைவர்களின் செக்மார்க்குகள் நீக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ப்ரொஃபைல் புகைப்படத்தை மாற்றிய பின்பும் நரேந்திர மோடி, நிதின் கட்கரி உள்ளிட்டோரின் செக்மார்க்குகள் நீக்கப்படவில்லை.