மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது சீனாவில் உள்ள ஜின்பிங் நிலத்தடி ஆய்வகம்
சீனாவில் உள்ள ஜின்பிங் நிலத்தடி ஆய்வகத்தினை விரிவாக்கம் செய்து மேம்படுத்தும் கட்டுமானப் பணிகள் 2020ம் ஆண்டு முதல் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. இந்த விரிவாக்கப் பணிகளை சீனாவில் உள்ளி சிங்குவா பல்கலைக்கழகம் மற்றும் சீன அரசின் யாலாங் நதி நீர்மின்சார மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து மேற்கொண்டு வந்தன. தற்போது அதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, அந்த ஆய்வகத்தின் செயல்பாடுகள் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு சீனாவில், நிலப்பரப்பிற்குக் கீழே 2.4 கிமீ ஆழத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஜின்பிங் ஆய்வகமானது பல்வேறு முக்கிய ஆராய்ச்சிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஜின்பிங் நிலத்தடி ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள்:
நிலத்திற்கு கீழே ஆழத்தில் அமைந்திருப்பதால் பூமியின் மேற்பரப்பில் காணப்படும் காஸ்மிக் கதிர்கள் ஜின்பிங் ஆய்வகத்தில் ஊடுருவியிருக்காது. மிக மிக குறைவான அளவான காஸ்மிக் கதிர்களே அந்த ஆய்வகத்தில் கணக்கிடப்பட்டிருக்கின்றன. அப்படி இருக்கும் நிலையில், இந்தப் பேரண்டத்தில் நான்கில் ஒரு பங்கு இடத்தை ஆக்கிரமித்திருக்கும் டார்க் மேட்டர் குறித்த ஆய்வுகள் இந்த ஜின்பிங் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தாலியில் உள்ள கிரான் சாஸோ தேசிய ஆய்வகத்தை விட 300,000 கியூபிக் கொள்ளளவுடன் இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் இந்த ஜின்பிங் ஆய்வகத்தில் தங்களது ஆய்வுகளை மேற்கொள்ள, ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அங்கு குவிந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.