இந்த ஆண்டின் மிக குறுகிய பகல் பொழுதைக் கொண்ட நாள்: டிசம்பர் 21-இன் அறிவியல் முக்கியத்துவம்
செய்தி முன்னோட்டம்
வானியல் ரீதியாக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடக்கும். ஒன்று பகலும் இரவும் சமமாக இருக்கும் நாள் (Equinox), மற்றொன்று பகல் பொழுது மிக அதிகமாகவோ அல்லது மிகக் குறைவாகவோ இருக்கும் நாள் (Solstice). இந்த வரிசையில் வரும் டிசம்பர் 21, 2025 அன்று, நாம் இந்த ஆண்டின் மிகக் குறுகிய பகல் பொழுதை அனுபவிக்கப் போகிறோம்.
நேரம்
இந்தியாவில் இதற்கானத் துல்லியமான நேரம் என்ன?
இந்த ஆண்டு, குளிர்கால சங்கராந்தி (Winter Solstice) நிகழ்வு இந்திய நேரப்படி டிசம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை இரவு 8:33 மணிக்கு நிகழ்கிறது. வட அரைக்கோளத்தில் உள்ள இந்தியா போன்ற நாடுகளுக்கு அன்று பகல் பொழுது சுமார் 10 மணி நேரம் மட்டுமே இருக்கும், மீதமுள்ள 14 மணி நேரம் இரவாகவே இருக்கும்.
அறிவியல்
இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் ரகசியம்
பூமி சூரியனைச் சுற்றி வரும்போது, அது நேராக நிற்காமல் 23.5 டிகிரி சாய்வாகவே சுற்றுகிறது. சாய்வின் விளைவாக டிசம்பர் 21 அன்று, பூமியின் வட அரைக்கோளம் சூரியனிடமிருந்து அதன் அதிகபட்சத் தொலைவில் சாய்ந்திருக்கும். அன்று சூரியன் வானத்தில் அதன் மிகக் குறைந்த உயரத்தில் தெரியும். இது சரியாக மகர ரேகைக்கு (Tropic of Capricorn) நேர் மேலாக இருக்கும். இதனால்தான் வட அரைக்கோளத்தில் இருப்பவர்களுக்குச் சூரிய ஒளி மிகக் குறைந்த நேரமே கிடைக்கிறது.
முக்கியத்துவம்
இது ஏன் முக்கியமாகக் கருதப்படுகிறது?
அதிகாரப்பூர்வமாக 'வானியல் குளிர்காலம்' (Astronomical Winter) இந்த நிமிடத்தில் இருந்துதான் தொடங்குகிறது. காலநிலையைப் பொறுத்தவரை பல பகுதிகளில் முன்பே குளிர் தொடங்கியிருந்தாலும், விண்வெளி அறிவியலின்படி இதுதான் குளிர்காலத்தின் முதல் நாள். இந்த நாள் 'இருண்ட நாள்' என்று அழைக்கப்பட்டாலும், உண்மையில் இது ஒரு மகிழ்ச்சியான தருணம். ஏனெனில், டிசம்பர் 21க்குப் பிறகு, ஒவ்வொரு நாளும் பகல் பொழுது மெல்ல மெல்ல நீட்டிக்கப்படும். அதாவது, இருள் குறைந்து ஒளி மீண்டும் உலகிற்குத் திரும்பத் தொடங்கும். இங்கிலாந்தின் 'ஸ்டோன்ஹெஞ்' (Stonehenge) போன்ற பழங்காலக் நினைவுச்சின்னங்கள், இந்தச் சங்கராந்தி நாளில் சூரியன் மறையும் திசையைத் துல்லியமாகக் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
உலகம்
உலகின் பிற பகுதிகளில் என்ன நடக்கும்?
நாம் குறுகிய பகல் பொழுதை அனுபவிக்கும் அதே வேளையில், பூமியின் மற்றொருப் பகுதியான தென் அரைக்கோளத்தில் (ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில்) இதற்கு நேர்மாறாக நடக்கும். அவர்களுக்கு அன்று மிக நீண்டப் பகல் பொழுது (Summer Solstice) மற்றும் கோடைகாலத்தின் தொடக்கமாகும். வட துருவத்தில் (Arctic) அன்று சூரியனே உதிக்காது, நாள் முழுவதும் இருட்டாகவே இருக்கும். தென் துருவத்தில் (Antarctica) அன்று சூரியன் மறையவே மறையாது.