இனி விண்டோஸ் இயங்குதளத்திலும் வாட்ஸ்அப்பின் ஸ்கிரீன் ஷேரிங் வசதி
வாட்ஸ்அப் நிறுவனமானது, ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இயங்களுதளங்களில் பயன்படுத்தப்படும் தங்களது செயலிக்கான பல்வேறு புதிய வசதிகளை பீட்டா சோதனையாளர்கள் மூலம் சோதனை செய்து வருகிறது. ஏற்கனவே இந்த வசதிகள் உருவாக்கத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது பீட்டா சோதனைக்கு வெளியிடப்பட்டிருக்கிறது. விண்டோஸ் இயங்குதளத்தில் வாட்ஸ்அப் செயலியின் மூலம் வீடியோ காலில் ஸ்கிரீன் ஷேரிங் வசதியை தற்போது அந்நிறுவனம் சோதனை செய்து வருகிறது. 2.23.11.19 என்ற வாட்ஸ்அப்பின் ஆண்ட்ராய்டு பீட்டா அப்டேட்டில் இந்த புதிய வசதியானது ஏற்கனவே சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது விண்டோஸ் இயங்குதளத்திற்கான 2.2322.1.0 என்ற வாட்ஸ்அப் அப்டேட்டில் இந்த புதிய வசதி சோதனைக்காக வெளியிடப்பட்டிருக்கிறது.
வாட்ஸ்அப்பின் புதிய ஸ்கிரீன் ஷேரிங் வசதி:
வீடியோ காலின் போது, பயனர்கள் தங்கள் ஸ்கிரீனை ஷேர் செய்வதற்காக புதிய வசதி கொடுக்கப்படும். இதனைக் கிளிக் செய்து நம்முடைய ஸ்கிரீனை மற்றவர்களுக்கு தெரியும்படி ஷேர் செய்ய முடியும். சாட்டிங் வசதியைப் போல, இந்த ஸ்கிரீன் ஷேரிங் வசதியானது எண்டு-டு-எண்டு என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்காது. ஸ்கிரீனில் நாம் பகிரும் தகவல்களை வாட்ஸ்அப் நிறுவனத்தால் பார்க்க முடியுமாம். ஆனால், எப்போது ஸ்கிரீனை ஷேர் செய்ய வேண்டும், எப்போது அதனை நிறுத்த வேண்டும் என முழுமையான கட்டுப்பாடும் பயனர்களிடமே இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தற்போது வரை, கேஷூவலான மீட்டிங்குகளுக்கும் ஸ்கிரீன் ஷேரிங் வசதிகளுக்காகவே கூகுள் மீட், மைக்ரோசாப்ட் டீம்ஸ் உள்ளிட்ட சேவைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆனால், இனி வாட்ஸ்அப் மூலமாகவே கேஷூவல் மீட்டிங்குகளை நடத்த முடியும்.