வீடியோ காலில் ஸ்கிரீன் ஷேரிங் வசதியை அறிமுகப்படுத்தவிருக்கும் வாட்ஸ்அப்
வீடியோ கால்களில் ஸ்கிரீன் ஷேரிங் வசதியை முன்னதாக சோதனை செய்து வந்தது வாட்ஸ்அப். அந்த வசதியை அடுத்து வரும் நாட்களில் பயனர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். ஐஓஎஸ், ஆண்ராய்டு மற்றும் விண்டோஸ் என அனைத்து இயங்குதளப் பயனர்களுக்கு இந்த வசதியை தற்போது அறிமுகப்படுத்தவிருக்கிறது வாட்ஸ்அப். வீடியோ காலின் போது ஷேர் என்ற ஒரு ஆப்ஷனும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதனைக் கிளிக் செய்வதன் மூலம், நமது மொபைல் அல்லது லேப்டாப் ஸ்கிரீனை முழுமையாகவோ அல்லது குறிப்பிட்ட ஒரு செயலியின் ஸ்கிரீனை மட்டுமோ கூட பயனர்களால் பகிர முடியும் எனத் தெரித்திருக்கிறது வாட்ஸ்அப்.
வாட்ஸ்அப் ஸ்கிரீன் ஷேரிங்:
வீடியோ, ஆடியோ மற்றும் மெஸேஜிங் என அனைத்து வகையான சேவைகளுக்குமான ஒரே இடமாக வாட்ஸ்அப்பை மாற்றும் வகையில் மேம்படுத்தி வருகிறது மெட்டா. தற்போது ஸ்கிரீன் ஷேரிங் வசதி மற்றும் வீடியோ காலில் கூடுதல் பயனர்களை இணைத்துக் கொள்ளும் வசதிகளை அளித்திருப்பதன் மூலம், கூகுள் மீட் மற்றும் ஸூம் போன்ற சேவைகளுக்கான போட்டியாளராக உருவெடுத்து வருகிறது வாட்ஸ்அப். முன்னதாக வீடியோ காலில், லேண்டுஸ்கேப் மோடைப் பயன்படுத்தும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியிருந்தது. மேலும், வாய்ஸ் சாட் மற்றும் பாஸ்கீ ஆகிய வசதிகளையும் பீட்டா பயனாளர்கள் மூலம் அந்நிறுவனம் சோதனை செய்து வருவதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.