'சேனல்ஸ்' என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தவிருக்கும் வாட்ஸ்ப்
உலகளவில் அதிக ஸ்மார்ட்போன் பயனர்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலியானது தற்போது வரை ஒரு குறுஞ்செய்தி செயலியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப்பை ஒரு குறுஞ்செய்தி செயலியாக மட்டுமல்லாமல், ஒரு சமூக வலைத்தளமாக அல்லது பல்வேறு வசதிகளைக் கொண்ட ஆல்-இன்-ஒன் செயலியாக மாற்ற புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது அந்நிறுவனம். அந்த வகையில் தற்போது புதிதாக 'சேனல்ஸ்' என்ற புதிய வசதியானது வாட்ஸ்அப்பில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இந்த சேனல்ஸ் வசதியானது இரு வழி தகவல் பரிமாற்றமாக இல்லாமல், ஒரு வழி செய்திப் பரிமாற்றமாக இருக்கும் வகையில் உருவாக்கியிருக்கிறது வாட்ஸ்அப். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், நிறுவனங்கள் மற்றும் பிரபலங்கள், தங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களுடன் இதன் மூலம் தகவல் பரிமாறிக் கொள்ள முடியும்.
இன்ஸ்டாகிராமிலும் சேனல்ஸ்:
வாட்ஸ்அப்புக்கு முன்னதாகவே சேனல்ஸ் வசதியில் உள்ள அம்சங்களைப் போலவேயான அம்சங்களைக் கொண்ட 'பிராட்கேஸ்ட் சேனல்ஸ்' என்ற வசதி இன்ஸ்டாகிராம் தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவும் கிட்டத்தட்ட இரு வழி தகவல் பரிமாற்றமாக இல்லாமல் ஒரு வழி செய்தி பரிமாற்றமாகப் பயன்படுத்தும் வகையிலேயே உருவாக்கப்பட்டது. தற்போது உலகமெங்கும் இந்த வசதியை பல்வேறு பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தியிருக்கிறது இன்ஸ்டாகிராம். அத்தளத்தில் பிராட்கேஸ்ட் சேனல்ஸ் வசதிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்தே வாட்ஸ்அப்பில் அதே போன்ற ஒரு வசதியை மெட்டா உருவாக்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு முன்னதாக பல ஆண்டுகளாகவே இதே போன்ற சேன்ல்ஸ் என்ற வசதியை டெலிகிராம் நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.