
இனி ஸ்மார்ட்வாட்ச்சிலேயே வாட்சப் பயன்படுத்தலாம்; மெட்டா நிறுவனம் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
Wear OS ஸ்மார்ட்வாட்ச்களில் வாட்சப்பை பயன்படுத்தும் வசதியை அனைத்து பயனர்களுக்கும் மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
முன்னதாக, இந்த அம்சம் வாட்சப் பீட்டா அப்டேட் சேவையை பயன்படுத்துவர்களுக்கு மட்டும் வழங்கி வந்த நிலையில், தற்போது அனைத்து வாட்சப் பயனர்களுக்கும் கிடைக்கிறது.
இதன் மூலம் Wear OS ஸ்மார்ட்வாட்ச் கொண்டுள்ள பயனர்கள், இனி ஸ்மார்ட்போனை பயன்படுத்தாமல், எளிதில் வாட்சப் சாட்டில் பதிலளிக்க முடியும்.
கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான Wear OS ஸ்மார்ட்வாட்ச்களில் இந்த சேவை அறிமுகமாகியுள்ள நிலையில், ஆப்பிளின் ஸ்மார்ட்வாட்ச்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டமான Watch OSஸிலும், இதே போல் வாட்சப்பை அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளதாக என்பது குறித்து மெட்டா நிறுவனம் தற்போது வரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.
how to use whatsapp in wear os
Wear OS ஸ்மார்ட்வாட்ச்சில் வாட்சப்பை இணைப்பது எப்படி?
Wear OS ஸ்மார்ட்வாட்சில் வாட்சப்பை பயன்படுத்த, ஆண்ட்ராயிட் ஸ்மார்ட்வாட்ச், Wear OS 3 இல் இயங்க வேண்டும்.
Wear OS 3 இல் ஸ்மார்ட்வாட்ச் இயங்குவதை உறுதி செய்தபிறகு, Wear OSக்கான வாட்சப் வெர்சன் 2.23.14.81ஐப் பதிவிறக்கி, அதை உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்சப் கணக்குடன் இணைக்கலாம்.
இதன் மூலம், உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உள்ள சமீபத்திய அரட்டைகளை ஸ்மார்ட்வாட்ச்சில் பார்க்கலாம். மேலும், வேறொரு பயனருடன் புதிய அரட்டையைத் தொடங்கலாம் அல்லது ஈமோஜி, உரை மற்றும் குரல் செய்திகள் மூலம் உங்களுக்கு வரும் பதிவுகளுக்கு பதிலளிக்கலாம்.
ஆண்ட்ராயிட் மற்றும் ஐஓஎஸ்க்கான வாட்சப் செயலியைப் போலவே, Wear OSஸிலும் அரட்டைகள், குரல் செய்திகள் மற்றும் பிற உள்ளடக்கங்களை எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் மெட்டா நிறுவனம் பாதுகாக்கிறது.