புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியது வாட்ஸ்அப்!
பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கத்தோடு புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம். அக்கவுண்ட் ப்ரொடெக்ட், டிவைஸ் வெரிபிகேஷன் மற்றும் ஆட்டோமேட்டிக் செக்யூரிட்டி கோட்ஸ் ஆகிய மூன்று பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது வாட்ஸ்அப். 'வாட்ஸ்அப்புடன் பாதுகாப்பாக இணைந்திருங்கள்' (Stay Safe with Whatsapp) என்ற முன்னெடுப்பின் ஒரு பகுதியாக இந்த பாதுகாப்பு அம்சங்களை வாட்ஸ்அப் அறிமுகம் செய்திருக்கிறது. பயனர்களுக்கு வாட்ஸ்அப் தளத்தில் உள்ள பாதுகாப்பு வசதிகளை பற்றி தெரியப்படுத்தவும், அவற்றைப் பயன்படுத்தி ஆன்லைன் மோசடிகளில் சிக்காமல் வாட்ஸ்அப்பை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் தான் இந்த முன்னெடுப்பின் நோக்கம், எனத் தெரிவித்திருக்கிறது வாட்ஸ்அப்.
புதிய பாதுகாப்பு அம்சங்கள்:
நம்முடைய வாட்அப் கணக்கை வேறு சாதனத்திற்கு மாற்றும் போது, நாம் முதலில் வாட்ஸ்அப்பை பயன்படுத்திய சாதனத்தைக் கொண்டு சரிபார்த்த பிறகே புதிய சாதனத்தில் நம்முடைய வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்த முடியும். நம்முடைய ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் வைரசால் பாதிக்கப்பட்டாலோ அல்லது ஹேக் செய்யப்பட்டாலோ, நம்முடைய வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் புதிய பாதுகாப்பு அம்சமான டிவைஸ் வெரிபிகேஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது வாட்ஸ்அப். நமது வாட்ஸ்அப் சாட்டானது எண்டு-டூ-எண்டு என்கிரிட் செய்யப்பட்டிருக்கிறது என்பதை உறுதிசெய்யும் வகையில் ஆட்டோமேட்டிக் செக்யூரிட்டி கோட்ஸ் வசதியை அறிமுகம் செய்திருக்கிறது வாட்ஸ்அப். மேலும், நமது வாட்ஸ்அப் கணக்கை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள Two-Step Verification-ஐ பயன்படுத்துவது மற்றும் நமது வாட்ஸ்அப் பேக்அப்களும் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கிறது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.