புதிய பாதுகாப்பு வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கும் வாட்ஸ்அப், என்னென்ன வசதிகள்?
வாட்ஸ்அப் நிறுவனமானது, தங்கள் பயனர்களின் கணக்கு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய இரண்டு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. Silent Unknown Callers மற்றும் Privacy Checkup ஆகிய இரண்டு புதிய வசதிகளையே வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது. கடந்த மாதம், இந்திய வாட்ஸ்அப் பயனர்களின் வாட்ஸ்அப் கணக்கிற்கு வெளிநாட்டு எண்களில் இருந்து வாட்ஸ்அப்பில் தொடர்ந்து கால்கள் வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்தியாவில் உள்ள பல வாட்ஸ்அப் பயனர்களும் இந்தப் பிரச்சினையை சந்தித்தனர். இந்தப் பிரச்சினையை சரி செய்வதற்காக புதிய வசதியை சோதனை செய்து வருவதாக அப்போதே தெரிவித்திருந்தது வாட்ஸ்அப் நிறுவனம். அந்த வசதியை தான் தற்போது Silent Unknown Caller வசதியாக வெளியிட்டிருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம்.
வாட்ஸ்அப்பின் புதிய வசதிகள்:
இந்த வசதியைப் பயன்படுத்தினால், நமக்கு தெரியாத எண்களில் இருந்து வரும் ஸ்பேம் கால்கள் குறித்த நோட்டிபிகேஷன்களை வாட்ஸ்அப் செயலியானது தானாகவே சைலன்ட் செய்து விடும். நமக்கு அது குறித்த நோட்டிபிகேஷன்கள் வராது. நம்முடைய தொடர்புப் பட்டியலில் உள்ள எண்களிடமிருந்து அழைப்புகள் வந்தால் மட்டுமே வாட்ஸ்அப் நமக்குத் தெரியப்படுத்தும். பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் விதமாக தனியுரிமை பரிசோதனை என்ற புதிய வசதியையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த வசதியின் மூலம் பயனர்கள் தங்களுக்கு தேவையான தனியுரிமை பாதுகாப்பு வசதிகளை மட்டும் ஆன் செய்து வைத்துக் கொள்ளலாம். வாட்ஸ்அப்பில் என்ன விதமான தனியுரிமை பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றன என்பது குறித்தும், இந்த வசதியை வாட்ஸ்அப்பில் நாம் பயன்படுத்தும் போதே தெரிந்து கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.