புதிய 'சேனல்ஸ்' வசதியை அறிமுகப்படுத்தியிருக்கும் வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது சேவையில் புதிதாக 'சேனல்ஸ்' (Channels) என்ற வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதனை கிரியேட்டர்கள் மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது வாட்ஸ்அப். தற்போது வாட்ஸ்அப்பில் 'ஸ்டேட்டஸ்' இடம் பெற்றிருக்கும் பகுதியின் கீழே புதிய சேன்ல்ஸ் வசதி இடம்பெறும் வகையில் வடிவமைத்திருக்கிறது அந்நிறுவனம். இந்த இடத்தில் நமக்குப் பிடிக்கும் கிரியேட்டர்கள், நிறுவனங்கள், விளையாட்டுக் குழுக்கள் ஆகியவற்றின் கணக்குகளை நாம் பின்தொடரலாம். அவர்கள் இந்த சேனல்ஸ் பகுதியில் பதிவிடும் தகவல்களை நம்மால் பார்க்க முடியும். ஆனால், அதற்கு ரிப்ளை எதுவும் செய்ய முடியாது. இது தான் வாட்ஸ்அப்பின் புதிய சேனல்ஸ் வசதி.
சமூக வலைத்தள அந்தஸ்தைப் பெறுகிறதா வாட்ஸ்அப்?
இது வரை தனிப்பட்ட குறுஞ்செய்தி பரிமாறிக் கொள்ளும் தளமாக இருந்து வந்த வாட்ஸ்அப், இந்தப் புதிய அப்டேட்டின் மூலமாக ஒரு சமூக வலைத்தள அந்தஸ்தைப் பெறவிருக்கிறது. இந்த சேனல்ஸ் வசதியின் மூலம் பகிரப்படும் தகவல்களை 30 நாட்களுக்கு மட்டுமே அதனைப் பின்தொடர்பவர்களால் பார்க்க முடியுமாம். அதன் பிறகு தானாகவே அழிந்து விடும் வகையில் இந்த வசதி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மற்ற சமூக வலைத்தளங்களில் உள்ளதைப் போல நாம் யாரைப் பின்தொடர்கிறோம் என நம் தொடர்பில் இருக்கும் மற்ற நபர்களால் அறிய முடியாது. நாம் பின்தொடரும் நபர்களையும், அவர்கள் கொடுக்கும் அப்டேட்களை நாம் மட்டுமே பார்க்க முடியும். முழுவதுமாக தனியுரிமையை மையப்படுத்தி இந்த வசதியைக் கொண்டு வந்திருக்கிறது வாட்ஸ்அப்.