Loading...
வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்! பயனர்களிடம் கேட்கப்படும் பிறந்த தேதி! அரசின் புதிய கட்டுப்பாடுகளா? உண்மை பின்னணி
வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்! பயனர்களிடம் கேட்கப்படும் பிறந்த தேதி! அரசின் புதிய கட்டுப்பாடுகளா? உண்மை பின்னணி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 01, 2026
08:19 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் வாட்ஸ்அப் செயலி சில பயனர்களிடம் அவர்களின் பிறந்த தேதியை கேட்கத் தொடங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. அபிஷேக் யாதவ் என்ற தொழில்நுட்பத் தகவல் பகிர்வாளர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட் ஒன்றில், "எதிர்கால இந்திய அரசின் விதிமுறைகளின்படி உங்கள் பிறந்த தேதியை சேர்க்க வேண்டும்" என்ற செய்தி வாட்ஸ்அப் திரையில் தோன்றியது போன்று காட்டப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் விரைவில் சமூக வலைதளங்கள் மற்றும் மெசேஜிங் செயலிகளுக்குக் கடுமையான வயது கட்டுப்பாடுகள் வரவுள்ளனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உண்மை

இந்திய அரசு அல்லது வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வ அறிவிப்பா?

இருப்பினும், இந்தச் செய்தி தொடர்பாக இந்திய அரசோ அல்லது வாட்ஸ்அப் நிர்வாகமோ இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியடவில்லை.

எனவே, இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவலாகவே தற்போதைக்குக் கருதப்படுகிறது.

உலகளவில் சில பிராந்தியங்களில் வயது வரம்பு சார்ந்த சட்டங்களைக் கடைப்பிடிப்பதற்காக வாட்ஸ்அப் அவ்வப்போது பயனர்களின் வயதை உறுதி செய்வது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், இந்தியாவில் இது போன்ற புதிய சட்டங்கள் ஏதும் அமலுக்கு வரவுள்ளதா என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை.

காரணம்

வாட்ஸ்அப் ஏன் பயனர்களின் வயதைக் கேட்கிறது?

வாட்ஸ்அப் தனது அதிகாரப்பூர்வ உதவிப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களின்படி, பயனர்களுக்கு வயதுக்கேற்ற பாதுகாப்பான அனுபவத்தை வழங்குவதற்கும் உலகளாவிய சட்டப்பூர்வக் கடமைகளைப் பூர்த்தி செய்வதற்கும் வயது தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

மெட்டா ஏஐ மற்றும் விளம்பரங்கள்: மெட்டா ஏஐ அம்சங்களைப் பயன்படுத்துவதற்கும், சேனல்கள் மற்றும் ஸ்டேட்டஸ்களில் வயதுக்கேற்ற விளம்பரங்களைக் காட்டுவதற்கும் இது உதவுகிறது.

பாதுகாப்பு & தனியுரிமை: 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்களைப் பாதுகாக்கவும், தங்களது சேவை விதிகளை முறையாக செயல்படுத்தவும் இந்த விவரங்கள் பயன்படுகின்றன.

ரகசியம் காக்கப்படும்: பயனர்கள் உள்ளிடும் பிறந்த தேதி அல்லது வயது விவரங்கள் மற்ற எந்தவொரு வாட்ஸ்அப் பயனருக்கும் காட்டப்படாது என நிறுவனம் உறுதியளித்துள்ளது.

ADVERTISEMENT

கொள்கைகள்

சர்வதேச நாடுகளின் வயது வரம்புக் கொள்கைகள்

ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதித்து சட்டங்களைக் கொண்டுவந்துள்ளன.

ஆனால், அந்தத் தடைகளில் இருந்தும் கூட வாட்ஸ்அப் செயலிக்கு விலக்கு அளிக்கப்பட்டு தனியான வழிகாட்டுதல்களின் கீழ் இயங்கி வருகிறது.

எனவே, இந்தியாவிலும் இதுபோல ஆன்லைன் பாதுகாப்பு விதிகள் எதிர்காலத்தில் வந்தால் டெலிகிராம், இன்ஸ்டாகிராம், சிக்னல் போன்ற அனைத்து செயலிகளுக்கும் வயது சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படலாம்.

ஆனால், தற்போதைக்கு மத்திய அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வராததால் பயனர்கள் அச்சப்படத் தேவையில்லை.

ADVERTISEMENT