தொடர்பு எண்ணை சேமிக்காமலேயே குறுஞ்செய்தி அனுப்பும் வசதி, விண்டோஸ் இயங்குதளத்திற்கும் அறிமுகம் செய்தது வாட்ஸ்அப்
செய்தி முன்னோட்டம்
முன்பு வாட்ஸ்அப்பில் ஒரு புதிய தொடர்புக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என்றால், அந்த எண்ணை முதலில் நமது மொபைலில் சேமித்து, அதன் பின்பே வாட்ஸ்அப் மூலம் அதற்கு குறுஞ்செய்தி அனுப்ப முடிந்தது.
ஆனால், சில வாரங்களுக்கு முன்னர் தொடர்பைப் பதிவு செய்யாமலேயே நேரடியாக மொபைல் எண்ணை மட்டும் உள்ளிட்டு குறுஞ்செய்தி அனுப்ப முடிகிற வகையில் புதிய வசதியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனாளர்களுக்கு வழங்கியது வாட்ஸ்அப்.
இந்த வசதியைப் பயன்படுத்த வாட்ஸ்அப்பினுள் 'New Chats'ஐ கிளிக் செய்து, மேலே இருக்கும் தேடுதல் பெட்டகத்தில் மொபைல் எண்ணை உள்ளிட்டால் போதும். மொபைலில் தொடர்பு எண்ணைப் பதிவு செய்யமலேயே நம்மால் குறுஞ்செய்தியை அனுப்ப முடியும்.
வாட்ஸ்அப்
விண்டோஸ் இயங்குதளத்திற்கும் அறிமுகம்:
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களைத் தொடர்ந்து மேற்கூறிய வசதியை விண்டோஸ் இயங்குதளத்திற்கும் அறிமுகப்படுத்த சோதனை செய்து வருகிறது வாட்ஸ்அப்.
2.2342.6.0 என்ற விண்டோஸ் இயங்குதள வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் மேற்கூறிய வசதியை அறிமுகப்படுத்தி சோதனை செய்து வருகிறது வாட்ஸ்அப் நிறுவனம்.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களைப் போலவே விண்டோஸ் வாட்ஸ்அப் செயலியிலும் New Chat-ஐ கிளிக் செய்து இந்த வசதியைப் பயன்படுத்தலாம் அல்லது New chats பகுதியில் உள்ள 'போன் நம்பர்' என்ற தேர்வை கிளிக் செய்தும் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும்.
பீட்டா சோதனையைத் தொடர்ந்து பிற விண்டோஸ் வாட்ஸ்அப் பயனாளர்களுக்கும் இந்த வசதியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது வாட்ஸ்அப்.