புதிய ரீசார்ஜ் திட்டம்.. அறிமுகப்படுத்தி சில நாட்களிலேயே நிறுத்திய வோடஃபோன்!
குறைந்து வரும் தங்களுடைய வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது வோடஃபோன் நிறுவனம். அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் 180 நாட்கள் வேலிடிட்டியில் ரூ.599 மதிப்பு கொண்ட ப்ரீபெய்டு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம். வோடஃபோனை இராண்டாம் எண்ணாகப் பயன்படுத்துபவர்களுக்காக எஸ்எம்எஸ் சேவையின்றி குறைந்த வசதிகளுடன் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால், வெளியான சில நாட்களிலேயே தற்போது இந்தத் திட்டத்தை சத்தமில்லாமல் கைவிட்டிருக்கிறது வோடஃபோன் நிறுவனம். தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க மேற்கூறிய திட்டத்தை வெளியிட்டிருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் இது அந்நிறுவனத்தின் வருவாயைப் பாதிக்கும். எனவே தான் வெளியான சில நாட்களிலேயே இந்தத் திட்டத்தை நிறுத்தியிருக்கிறது வோடஃபோன் நிறுவனம்.
நிதி நெருக்கடியில் வோடஃபோன்:
ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் 5G சேவை வெளியிட்டு நாடு முழுவதும் வரிவுபடுத்தி வரும் நிலையில், 5G சேவைகளை வெளியிட நிதியின்றி தவித்து வருகிறது வோடஃபோன். குறைந்த வசதிகள் மற்றும் நீண்ட வேலிடிட்டி கொண்ட திட்டங்கள், வாடிக்கையாளர்களிடம் வோடஃபோனின் பயன்பாட்டையே குறைந்து விடும். ஆனால், அதற்கு ஈடு செய்யும் வகையில் வேறு பல ப்ரீபெய்டு திட்டங்களை வைத்திருக்கிறது அந்நிறுவனம். எஸ்எம்எஸ் வசதிகளுடன், தினசரி 1.5 GB டேட்டா முதல் கூடுதல் டேட்டா மற்றும் இரவு 12 முதல் 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டா ஆகிய வசதிகளை தங்களுடைய ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களுடன் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக சேர்த்து வழங்குகிறது வோடஃபோன்.