'ஒரு இந்தியரை விண்வெளிக்கு அனுப்பத் தயாராக இருக்கிறது அமெரிக்கா': நாசா தலைவர் அறிவிப்பு
நாசா மற்றும் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக ஒரு இந்தியரை விண்வெளிக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதுவும் அடுத்த வருடமே இந்த திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு இந்திய விண்வெளி வீரருக்கு பயிற்சி அளித்து, அவரை 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப அமெரிக்கா உதவும் என்று நாசா நிர்வாகி பில் நெல்சன் தெரிவித்துள்ளார். தொழில் ரீதியாக நேற்று இந்தியா வந்திருந்த நாசா நிர்வாகி பில் நெல்சன், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இந்திய விண்வெளி வீரரை அனுப்புவது உட்பட பல முக்கிய விண்வெளி முயற்சிகளில் இந்தியாவுடன் ஒத்துழைக்க விருப்பம் தெரிவித்தார்.
தனது சொந்த விண்வெளி நிலையத்தை நிறுவுமா இந்தியா
இந்த திட்டம், நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்(இஸ்ரோ) இணைந்து உருவாக்கி வரும் மனித விண்வெளிப் பயண ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு யாரை அனுப்புவது என்பதை இஸ்ரோ தீர்மானிக்க உள்ளது. இந்தியா அடுத்து எந்த மாதிரியான விண்வெளி ஆராய்ச்சிகளை செய்ய இருக்கிறதோ அதற்கு ஏற்ற ஒரு விண்வெளி வீரரை இஸ்ரோ தேர்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை விண்ணில் நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 2035 ஆம் ஆண்டுக்குள் 'பாரதிய அந்தரிக்ஷா நிலையத்தை' விண்ணில் நிறுவுவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி முன்பு கூறியிருந்தார்.