Page Loader
மரபணு மூலம் திறமையைக் கண்டறிதல்.. இந்திய-அமெரிக்க தொழிலதிபரின் புதிய ஐடியா!
இந்திய-அமெரிக்க தொழிலதிபர் முகமது முஸ்தபா சைதல்வி

மரபணு மூலம் திறமையைக் கண்டறிதல்.. இந்திய-அமெரிக்க தொழிலதிபரின் புதிய ஐடியா!

எழுதியவர் Prasanna Venkatesh
Jun 05, 2023
04:33 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய தொழிலதிபரான முகமது முஸ்தபா சைதல்வி, குழந்தைகளின் மரபணுவைச் சோதனை செய்வதன் மூலம் அவர்களின் திறமையைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறார். இந்திய கல்வி முறையில் அனைத்து குழைந்தைகளுக்கு பொதுவாகவே கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒரு திறமை இருக்கும், அதனை கண்டறிந்து பட்டை தீட்டினால் பிற்காலத்தில் அந்தத் துறையில் அவர்கள் மிளிர்வார்கள் எனக் கூறுகிறார் சைதல்வி. இதனை தன்னுடைய மும்பையைச் சேர்ந்த நிறுவனமான ஜீன்ஸ்அன்டுயு (Genes and You) நிறுவனத்தின் மூலம் சத்தியப்படுத்த முனைவதாகத் தெரிவித்திருக்கிறார் அவர். தனிப்பட்ட கல்வி மற்றும் மருத்துவத்தை வழங்கும் வகையிலான AI திட்டம் ஒன்றில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து தற்போது பணியாற்றி வருகிறார் சைதல்வி.

தொழில்நுட்பம்

மரபணு மூலம் திறனைக் கண்டறிதல்: 

ஒரு குழந்தையில் மரபணுவை சோதனை செய்வதன் மூலம் அந்தக் குழந்தையில் திறமையைக் கண்டறிந்து, பின்னர் அதற்கேற்ப 10-15 வருடத்திற்கான பயிற்சித் திட்டத்தினை வழங்க வேண்டும், இது தான் தன்னுடைய புதிய ஸ்டார்ட்அப்பின் திட்டம் எனத் தெரிவித்திருக்கிறார் சைதல்வி. இதற்கான மென்பொருளையே தற்போது அந்நிறுவனம் உருவாக்கி வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக சரியான திறமையை சரியான வழியில் வழிநடத்தி அதனை நாட்டின் முன்னேற்றப் பாதைக்காகப் பயன்படுத்த முடியும் என நம்புகிறார் முகமது முஸ்தபா சைதல்வி. AI குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, நிச்சயம் AI தொழில்நுட்பத்தினால் அதிகளவில் வேலையிழப்புகள் நிகழும், ஆனால் அதனால் நிறைய வாய்ப்புகளும் உருவாகும் எனத் தெரிவித்திருக்கிறார் அவர்.