பொது இடங்களில் இரத்த தான மையம், பள்ளி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு
விருதுநகரைச் சேர்ந்த இரண்டு ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் புதிய கண்டுப்பிடிப்பு ஒன்றை உருவாக்கி அசத்தியிருக்கிறார்கள். சக்தி பிரசாத் மற்றும் சக்தி பிரியன் ஆகிய இரு மாணவர்களும், இரத்த தானம் அளிப்பவர்கள் மற்றும் இரத்த வங்கிகள் ஆகியவற்றை இணைக்கும் வகையில் இரத்த வங்கியை உருவாக்கியிருக்கிறார்கள். இங்கு இரத்த வங்கி என அவர்கள் குறிப்பிடுவது ஏடிஎம் போன்ற, இரத்த தான தகவல்களைச் சேகரிப்பதற்குப் உருவாக்கியிருக்கும் ஒரு கருவி தான். இந்தக் கருவியை பொது இடங்களில், முக்கியமாக மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பொருத்தலாம். இந்தக் கருவியில் உள்ள LCD திரையில், அந்த மாவட்டத்தில் யார் யாருக்கு இரத்தம் தேவைப்படுகிறது போன்ற தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கும்.
பள்ளி மாணவர்கள் உருவாக்கிய இரத்த தான மையம்:
இரத்த தானம் அளிக்க விரும்புபவர்கள், அந்தக் கருவியில் தங்களுடைய பெயர், முகவரி, தொடர்பு எண் மற்றும் இரத்த வகை ஆகியவற்றைப் பதிவு செய்தால் போதும். இரத்த தான மையத்தைச் சேர்ந்தவர்களே, தானம் வழங்குபவர்களைத் தொடர்பு கொண்டு இரத்த தானத்தைப் பெற்றுக் கொள்வார்கள். இது தவிர, பேருந்து நிலையங்கள் மற்றும் இரயில் நிலையங்கள் ஆகிய பொது இடங்களில் இந்த இரத்த தான மையமத்தை அனுகும் வகையிலான QR கோடை வைப்பதன் மூலம் இதனை அணுக முடியும் எனத் தெரிவித்திருக்கிறார்கள் அந்த சாதனைச் சிறுவர்கள். இந்தக் கண்டுபிடிப்பை, அவர்கள் படிக்கும் பள்ளியில் உள்ள IBL-ATL (அடல் டிங்கரிங் லேப்ஸ்) ஆய்வக பயிற்சியாளர் வெங்கடேஷின் வழிகாட்டலுடன் உருவாக்கியிருக்கிறார்கள்.
மத்திய அரசின் 'அடல் இன்னோவேட்டிவ் மிஷன்' திட்டம்:
இந்தியாவில் புதுமைகளை முன்னெடுக்கவும், தொழில்முனைவோர்களை உருவாக்குவதற்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தவும் 'அடல் இன்னோவேட்டிவ் மிஷன்' என்ற திட்டத்தைச் செய்படுத்தி வருகிறது மத்திய அரசு. அத்திட்டத்தின் ஒரு பகுதி தான் இந்த அடல் டிங்கரிங் லேப்ஸ். அடல் இன்னோவேட்டிவ் திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள பள்ளிகளில் அடல் டிங்கரிங் லேப்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பின் உதவியுடன், பள்ளி மாணவர்கள் புதிதாக தாங்கள் உருவாக்க நினைக்கும் கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது பல்வேறு கண்டுபிடிப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். இளம் வயதிலேயே மாணவர்களிடம் உள்ள திறனை அறிந்து சரியாக வழிகாட்டுவதற்காகவே இந்த அடல் டிங்கரிங் லேப்ஸ் அமைப்பானது பள்ளிகளில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் வழியாகவே இந்த விருதுநகர் மாணவர்கள் தங்களது புதிய கண்டுபிடிப்பை சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள்.