நீண்ட பதிவுகளை பதிவிடும் வகையில் புதிய வசதியை சோதனை செய்து வரும் ட்விட்டர்
ட்விட்டருக்கு எதிராக பல்வேறு புதிய சமூக வலைத்தளங்கள் உருவாகி வரும் நிலையில், தங்கள் பயனாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், தங்களது சந்தா சேவையின் மூலம் வருவாயைப் பெருக்கவும், பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது ட்விட்டர். இரண்டு மணி நேர வீடியோ பகிரும் வசதி, விளம்பர வருவாயைப் பயனர்களுடன் பகிரும் வசதி எனப் பல்வேறு வசதிகளை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி வரும் நிலையில், தற்போது புதிதாக இரண்டு வசதிகளை ட்விட்டர் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஷார்ட் ஃபார்மெட் டெக்ஸ்ட்டுக்கு பேர் போன ட்விட்டர் நிறுவனம், தற்போது நீண்ட பதிவுகளையும், புத்தகங்களையும் கூட வெளியிடும் வகையில் புதிய வசதியை சோதனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
ட்விட்டரின் புதிய வசதி:
கடந்த ஆண்டு ஜூன் மாதம், எலான் மஸ்க், ட்விட்டரை கையகப்படுத்தும் முன்பு 'நோட்ஸ்' என்ற பெயரில் நீீண்ட பதிவுகளை, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் பதிவிடும் வகையிலான புதிய வசதியை சோதனை வந்தது ட்விட்டர் நிறுவனம். எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்திய பிறகு, அந்த புதிய வசதி குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது 'ஆர்டிகிள்ஸ்' என்ற பெயரில் அந்த வசதியை மீண்டும் அறிமுகப்படுத்தத் ட்விட்டர் நிறுவனம் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. எப்போது இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், விரைவில் புதிய வசதி அறிமுகமாகும் என்று மட்டும் கூறப்பட்டிருக்கிறது.