ஸ்மார்ட் டிவிக்களுக்கான வீடியோ செயலி ஒன்றை அறிமுகப்படுத்தும் ட்விட்டர்
ட்விட்டர் நிறுவனமானது, வீடியோவை அடிப்படையாகக் கொண்ட புதிய அப்டேட்கள் சிலவற்றை கடந்த சில மாதங்களில் அறிமுகப்படுத்தியிருந்தது. ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்கள் 2 மணி நேர வீடியோக்களையும் ட்விட்டரில் பதிவிட முடிந்த வகையில் இந்த புதிய அப்டேட் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது, ஸ்மார்ட் டிவிக்களுக்கான தனித்துவமான வீடியோ செயலி ஒன்றை ட்விட்டர் நிறுவனம் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 'ரியல் டால்ஸ் வித் ஸூபி' என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் எலான் மஸ்க் விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியிருந்தார். அந்த ஒன்றறை மணி நேர பாட்காஸ்ட் கொண்ட பதிவை தங்களது பக்கத்தில் ரீட்வீட் செய்திருந்தது 'ட்விட்டர் டெய்லி நியூஸ்' பக்கம்.
எலான் மஸ்கின் ட்வீட்
மேற்கூறிய ரீட்வீட்டின் கமெண்ட்ஸில் ட்விட்டர் பயனாளர் ஒருவர், 'ஒரு மணி நேர வீடியோக்களை ட்விட்டரில் என்னால் பார்க்க முடியாது. ஸ்மார்ட் டிவிக்களுக்கான ட்விட்டர் செயலி ஒன்று எங்களுக்கு வேண்டும்' எனப் பதிவிட்டிருந்தார். அதற்கு 'விரைவில் வருகிறது' எனப் பதிலளித்திருக்கிறார் எலான் மஸ்க். இதனைத் தொடர்ந்தே ஸ்மார்ட் டிவிக்களுக்கென புதிய வீடியோ செயலி ஒன்றை ட்விட்டர் வெளியிடலாம் என்ற தகவல் உறுதியானது. ட்விட்டரின் அடிப்படையான குறும்பதிவுகளைக் கடந்து, வீடியோ தொடர்பான சேவைகளை மேம்படுத்தி வருகிறது அந்நிறுவனம். எலான் மஸ்க்கின் வருகைக்குப் பிறகே இந்த மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருக்கின்றன. புதிய வீடியோ செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்றாலும், அது டிவிக்களுக்கு மட்டுமா, அதனை டிவியில் எப்படி பயன்படுத்துவது, எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.