விளம்பர வருவாய் பகிர்வை அனைத்து பயனர்களுக்கு அறிமுகப்படுத்திய X (ட்விட்டர்)
X (ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில் விளம்பர வருவாயைப் பகிரும் வசதியானது, இந்தியா உட்பட இன்று முதல் உலகமெங்கும் உள்ள X பயனர்களுக்கு தொடங்கப்படுவதாக அறிவித்திருக்கிறது அந்நிறுவனம். X தளத்தில் நாம் பதிவிடும் பதிவுகளின் மறுமொழியில் காட்டப்படும் விளம்பரங்களுக்கான வருவாயைப் பகிர்ந்து கொள்ள முடிவு செய்திருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் எலான் மஸ்க். தற்போது, அந்த வசதி தொடங்கப்பட்டிருப்பதாகத அறிவிக்கப்பட்டுள்ளது. X தளத்தின் மூலம் விளம்பர வருவாயைப் பெற குறிப்பிட்ட அளவுகோல்களையும், விதிமுறைகளையும் விதித்திருக்கிறது அந்நிறுவனம். அந்த அளவுகோல்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்ட, தகுதியான பயனர்களுக்கு விளம்பர வருவாய் பகிரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன அளவுகோல்கள் மற்றும் விதிமுறைகளை விதித்திருக்கிறது X?
X தளத்தின் மூலம் விளம்பர வருவாய் பெற விரும்பும் பயனர், X ப்ளூ (முன்னதாக ட்விட்டர் ப்ளூ) சேவைக்கு சந்தா செய்திருக்க வேண்டும். இந்தியாவில், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் மாதத்திற்கு ரூ.900 செலுத்தியும், வலைத்தளப் பயனர்கள் மாதத்திற்கு ரூ.650 செலுத்தியும் X ப்ளூவுக்கு சந்தா செய்து கொள்ளலாம். இரண்டாவது, கடந்த மூன்று மாதத்தில் தங்களது ட்விட்டர் பதிவுகளில் ஒட்டுமொத்தமாக 15 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்திருக்க வேண்டும். இறுதியாக, குறைந்தபட்சம் 500 பின்தொடர்பவர்களையாவது, விளம்பர வருவாயைப் பெற விரும்பு பயனர் கொண்டிருக்க வேண்டும். இந்த மூன்று அளவுகோல் அல்லது விதிமுறைகளை ஒரு பயனர் பெற்றிருக்கும்/ பின்பற்றும் பட்சத்தில் அவருக்கு விளம்பர வருவாய் பகிரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.