Page Loader
ஒரே மாதத்தில் 79% தினசரி பயனாளர்களை இழந்த ட்விட்டரின் போட்டியாளரான த்ரெட்ஸ்
ஒரே மாதத்தில் 79% தினசரி பயனாளர்களை இழந்த ட்விட்டரின் போட்டியாளரான த்ரெட்ஸ்

ஒரே மாதத்தில் 79% தினசரி பயனாளர்களை இழந்த ட்விட்டரின் போட்டியாளரான த்ரெட்ஸ்

எழுதியவர் Prasanna Venkatesh
Aug 14, 2023
04:48 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த ஜூலை 5ம் தேதி, இன்ஸ்டாகிராமுடன் இணைந்து செயல்படும் வகையிலான, ட்விட்டருக்கு போட்டியான, த்ரெட்ஸ் என்ற சமூக வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியது மெட்டா. வெளியான சில நாட்களிலேயே 100 மில்லியன் பயனாளர்களை எட்டி சாதனை படைத்தது த்ரெட்ஸ் வலைத்தளம். ஆனால், முதல் சில வாரங்களைத் தொடர்ந்து அத்தளத்தின் தினசரி பயனர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வந்தது. பயனாளர்களின் பயன்பாட்டிற்கு வெளியாகி தற்போது ஒரு மாதத்திற்கு மேலாகியிருக்கும் நிலையில், ஆண்ட்ராய்டில் 79% தினசரி பயனாளர்களை த்ரெட்ஸ் வலைத்தளம் இழந்திருப்பதாக சிமிலர்வெப் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஜூலை 7-ம் தேதி, ஆண்ட்ராய்டில் 49.3 மில்லியன் தினசரி பயனாளர்களைக் கொண்டிருந்தது த்ரெட்ஸ். ஆனால், ஆகஸ்ட் 7ம் தேதி அந்த எண்ணிக்கை 10.3 மில்லியனாகக் குறைந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது சிமிலர்வெப்.

த்ரெட்ஸ்

த்ரெட்ஸ் vs எக்ஸ் (ட்விட்டர்): 

ஆனால், த்ரெட்ஸின் போட்டியாளரான ட்விட்டரோ, ஆண்ட்ராய்டில் மட்டும் 100 மில்லியன் தினசரி பயனாளர்களைக் கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. ஜூலை 7ம் தேதி வரையிலான தரவுகளின்படி, த்ரெட்ஸ் தளத்தில் ஒரு பயனாளர் ஒருநாளில் சராசரியாக 14 நிமிடங்களைச் செலவழித்திருக்கிறார். ஆனால், ஆகஸ்ட் 7ம் தேதி வரையிலான தரவுப்படி இந்த அளவு 3 நிமிடங்களாகக் குறைந்திருக்கிறது. மறுபக்கம், எக்ஸ் தளத்தில் பயனாளர்கள் நாளொன்றுக்கு சரசாரியாக 25 நிமிடங்களைச் செலவழிப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம். முழுவதுமாக எக்ஸின் நகலாக இருந்தது, தனித்துவமான வசதிகளைக் கொண்டிராதது மற்றும் எக்ஸில் வழங்கும் சில அடிப்படை அம்சங்களையே வழங்காதது உள்ளிட்ட காரணங்களால், பயனாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் தடுமாறி வருகிறது த்ரெட்ஸ்.