ட்விட்டர் ஹேக்: 235 மில்லியன் மின்னஞ்சல் முகவரிகள் அம்பலமாகும் அபாயம்
சமீப காலமாக, பல பிரபலமான தளங்களை ஹேக்கர்கள் குறிவைக்கின்றனர். அதில் அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களின் தளங்களும் அடங்கும். அதேபோல சில மாதங்களுக்கு முன்பு, உலகெங்கும் உள்ள பல ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன. அப்படி ஹேக் செய்யப்பட்ட, கிட்டத்தட்ட 235 மில்லியன் ட்விட்டர் கணக்குகளின் தனிப்பட்ட மின்னஞ்சல்கள், அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய சைபர் செக்யூரிட்டி வல்லுநர் அலோன் கேலின் கூறியுள்ளார். குறிப்பாக, அடக்குமுறை அரசாங்கங்களை விமர்சிக்க, அநாமதேயமாக ட்விட்டர் கணக்குகளை பயன்படுத்திய நபர்களின் அடையாளங்கள், அம்பலமாக்கப்படும் அபாயம் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அவர் தனது லிங்க்டின் பதிவின் மூலம், "இந்த கசிவு, துரதிர்ஷ்டவசமாக நிறைய ஹேக்கிங், இலக்கிடப்பட்ட ஃபிஷிங், மற்றும் டாக்ஸிங் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பல லட்சம் மின்னஞ்சல்களை அம்பலப்படுத்திய ட்விட்டர் ஹேக்
எனினும், ட்விட்டர் கணக்குகளின் கடவுச்சொற்கள் கசிந்திருக்க வாய்ப்பில்லை என்றும், ஆனால், ஹேக்கர்கள் மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி மக்களின் கடவுச்சொற்களை மீட்டமைக்க முயற்சிக்கலாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எதிர்காலத்தில், இத்தகைய ஹேக்கிங்-ஐ தவிர்க்க, இரண்டு-அடுக்கு பாதுகாப்பை, ட்விட்டர் உறுதிப்படுத்த வேண்டுமென வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த குறிப்பிட்ட ஹேக்கிங், எலன் மஸ்க் ட்விட்டரைக் கைப்பற்றுவதற்கு முன்பே நடந்ததாக தெரிகிறது. மஸ்க், ட்விட்டரின் தலைவராக பொறுப்பேற்றதும் பல சவால்களை சந்தித்து வருகிறார். சமீபத்தில், ட்விட்டரின், சான் பிரான்சிஸ்கோ அலுவலகம் வாடகை செலுத்தாததால், அந்த வளாகத்தின் உரிமையாளர் வழக்குத் தொடர்ந்துள்ளார். இப்போது இந்த ஹேக்கிங் செய்தியும், மஸ்க்கிற்கு பெரும் தலைவலியாக மாறலாம்.