அரசு நிறுவனங்களை குறிவைத்து சைபர் தாக்குதல்
இந்தியா, அமெரிக்கா, இந்தோனேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உள்ள அரசு நிறுவனங்கள், 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அதிக சைபர் தாக்குதலுக்கு ஆளானதாக தகவல் வெளியானது. உலகம் முழுவதும், நடைபெற்ற சைபர் தாக்குதல்களில் 45 % இந்நாடுகள் மீது நடைபெற்றவை தான் என, சைபர் செக்யூரிட்டி நிறுவனமான கிளவுட்செக் ஒரு அறிக்கையில் தெரிவிக்கிறது. 2022 ஆம் ஆண்டில், ஹாக்கர்களால் அதிகம் தாக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது என அறிக்கை கூறுகிறது. நடைபெற்ற சைபர் தாக்குதல்களில், 13.7 % இந்திய அரசு நிறுவனங்களுக்கு எதிரானவை. சமீபத்தில் இந்தியாவில், AIIMS மற்றும் இந்திய ரயில்வே துறையில் சர்வர்கள் ஹேக் செய்யப்பட்டதாக செய்திகள் கசிந்தன.
இந்திய அரசு நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல்
இத்தகைய திடீர் தாக்குதலுக்கு காரணம், மலேசியாவின் டிராகன் ஃபோர்ஸ் ஆரம்பித்த #opindia #OpsPatuk பிரச்சாரங்கள் தான். "பல ஹேக்டிவிஸ்ட் குழுக்கள் இணைந்து இந்த பிரச்சாரங்களை ஆதரித்தன, இது அடுத்தடுத்த பிரச்சாரங்களுக்கு, பாதையை அமைத்தது. இந்தியாவில் உள்ள அரசு நிறுவனங்கள், விரிவான ஃபிஷிங் பிரச்சாரங்களின் பிரபலமான இலக்குகளாக மாறிவிட்டன," என்று அறிக்கை கூறுகிறது. "அரசு நிறுவனங்கள் மீதான சைபர் தாக்குதல்களின் முக்கிய நோக்கம், முக்கியமான தரவுகளை வெளிப்படுத்துவது, மாநிலத்திற்கு நிதி இழப்பு, மற்றும் மக்களிடையே பரவும் பீதி " என்று அறிக்கை கூறியது. கொரோனா காலத்திற்கு பிறகு, அரசு துறைகள் அதிவேகமாக, டிஜிட்டல் மயமாக்கபட்டது தான், டிஜிட்டல் ஹேக்கிங் அதிகரிக்க முக்கிய காரணம். இது ஹாக்கர்களுக்கு, ஒரு பெரிய தாக்குதல் பரப்பை, எளிதாக வழங்குகிறது.