ட்விட்டர் ப்ளூ சேவை: பணம் செலுத்தும் சந்தாதாரர்களுக்கு, உரையாடல்களில் முன்னுரிமை தரவரிசைகளை வழங்குகிறது
ட்விட்டர், சமீபத்தில் சந்தா முறையில் ப்ளூ டிக் வழங்க போவதாக அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக அதற்கான மாத சந்தா கட்டணத்தையும் அறிவித்தது. அது மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது. மேலும், வணிக நிறுவனங்களுக்கு தனியாக ஒரு ப்ளூ டிக் வசதியையும் அறிவித்தது. அதில் வணிக நிறுவனங்களின் முக்கிய நபர்களை குறிக்கும் வகையில் ஒரு குறியீடு வெளியிடப்படும் எனவும் அறிவித்தது. இப்போது அடுத்த அறிவிப்பாக, ப்ளூ டிக் பெற்ற மாத சந்தாதாரர்களுக்கு, ஒரு புதிய வசதியை அறிவித்துள்ளது. அதன்படி, அந்த சந்தாதாரர்கள், ட்விட்டரில் நடைபெறும் உரையாடல்களில் முன்னுரிமை பெறுவார். அவர்களது டிவீட்களும், அவர்களது பதில்களும் முன்னுரிமை பெற்று காட்டப்படும். இதன் மூலம், அவர்களின் கருத்துகள் மற்றும் உரையாடல்கள், மற்ற பயனர்களுக்கு அதிகமாகத் தெரியும்.
ட்விட்டர் ப்ளூ டிக் சேவையால் கிடைக்கும் பலன்கள்
இதன் மூலமாக போலி நபர்களையும், பாட்களையும் களையலாம் என மஸ்க் தெரிவித்துள்ளார். முன்னரே மஸ்க், "உறுப்பினர்கள், ஸ்பேம்/ஸ்கேமை தோற்கடிக்க அவசியமான பதில்கள், குறிப்புகள் மற்றும் தேடலில் முன்னுரிமை பெறுவார்கள்" என்று கூறியிருந்தார். அதன்படி, ட்விட்டர் நிறுவனம், இப்போது இந்த அம்சத்தை அறிமுகபடுத்த போகவதாக அறிவித்துள்ளது. கூடுதலாக, ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்கள், இப்போது 60 நிமிடங்கள் மற்றும் 2 ஜிபி அளவுள்ள, 1080p தெளிவுத்திறனில் வீடியோக்களைப் பதிவேற்றலாம். முன்னதாக, இந்த வீடியோ பதிவேற்றத்தின் வரம்பு 10 நிமிடங்கள் மற்றும் 512MB தான் இருந்தது.