கால் ரெக்கார்டிங் வசதியை மீண்டும் அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர்
கூகுள் நிறுவனமானது தங்களது ப்ளே ஸ்டோர் கொள்கைகளைக் கடந்த ஆண்டு மாற்றியமைத்த பிறகு, அதற்கு ஏற்ற வகையில் சேவை வழங்குவதற்காக கால் ரெக்கார்டிங் வசதியை தங்கள் சேவையில் இருந்து நீக்கியது ட்ரூகாலர் நிறுவனம். ஆனால், தற்போது AI-வசதி மற்றும் கூடுதல் பாதுகாப்பு அம்சத்துடன் கூடிய கால் ரெக்கார்டிங் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளங்களிலுமே இந்த வசதியை ட்ரூகாலர் நிறுவனம் வழங்கத்தொடங்கியிருக்கிறது. ஆனால், தற்போது அமெரிக்க பயனர்களுக்கு மட்டும், அதுவும் ப்ரீமியம் பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இனி வரும் மாதங்களில் உலகின் மற்ற நாடுகளைச் சேர்ந்த பயனர்களுக்கும் இந்த புதிய AI கால் ரெக்கார்டிங் வசதி விரிவுபடுத்தப்படலாம் எனத் தெரிகிறது.
ட்ரூகாலரின் புதிய AI கால் ரெக்கார்டிங் வசதி:
இந்த வசதியின் மூலம், நாம் ரெக்கார்டு செய்யும் கால்களை டெக்ஸ்ட் வடிவிலும் மாற்றிக் கொள்ள முடியுமாம். மேலும், பயனர்களின் தகவல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ரெக்கார்டு செய்யப்படும் கால்களானது பயனர்களின் சாதனத்தில் மட்டுமே சேமிக்கப்படும், வேறு சர்வர்களில் எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். தங்கள் சாதனத்தில் சேமிக்கப்படும் கால்களை, ஐஓஎஸ் பயனர்கள் ஐகிளவுடிலும், ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் டிரைவிலும் பேக்அப் எடுத்துக் கொள்ளலாம். அதனை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் வசதியும் அளிக்கப்படுகிறது. இந்த AI வசதியை வழங்குவதற்காக லார்ஜ் லாங்குவேஜ் மாடியூல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது ட்ரூகாலர். இந்தியாவிலும் விரைவில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது ப்ரீமியம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமானதாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.