காப்பீட்டு நிறுவனங்கள் இனி இந்த எண்களில் இருந்துதான் வாடிக்கையாளர்களை தொடர்புகொள்ள வேண்டும்; புதிய கட்டுப்பாடுகள் அமல்
செய்தி முன்னோட்டம்
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), பொதுமக்கள் மற்றும் காப்பீடுதாரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்தியாவில் உள்ள அனைத்துக் காப்பீட்டு நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்களுக்குச் சேவை மற்றும்ப் பணப் பரிவர்த்தனை தொடர்பானத் தகவல்களைத் தெரிவிக்க இனி '1600' என்ற எண்களில் தொடங்கும் பிரத்யேகத் தொலைபேசி எண்களை மட்டுமேப் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
காலக்கெடு
அமலுக்கு வரும் தேதி மற்றும் காலக்கெடு
இந்த அதிரடி உத்தரவை டிசம்பர் 16, 2025 அன்று டிராய் பிறப்பித்தது. காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்துடன் (IRDAI) ஆலோசித்தப் பிறகு, இதற்கானக் கடைசித் தேதியாக 2026 பிப்ரவரி 15ஆம் தேதியை டிராய் நிர்ணயித்துள்ளது. இந்தக் காலக்கெடுவிற்குள் அனைத்துக் காப்பீட்டு நிறுவனங்களும் தங்களின் தற்போதைய 10 இலக்கச் சாதாரண எண்களில் இருந்து '1600' வரிசை எண்களுக்கு மாற வேண்டும்.
காரணம்
எண்ணை மாற்றுவதற்கான காரணங்கள்
தற்போதுப் பொதுமக்கள் சந்திக்கும் மிகப்பெரியப் பிரச்சனைத் தேவையற்ற அழைப்புகள் மற்றும் மோசடி அழைப்புகள் ஆகும். சாதாரண 10 இலக்க எண்களில் இருந்து வரும்போது, அது உண்மையானக் காப்பீட்டு நிறுவனமா அல்லது மோசடியாளர்களா என்பதைக் கண்டறிய முடிவதில்லை. வங்கி அல்லது இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்துப் பேசுவதாகக் கூறிப் பொதுமக்களை ஏமாற்றிப் பணத்தைப் பறிக்கும் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மற்றும் பிற நிதிக் குற்றங்களைத் தடுக்க இந்தத் திட்டம் பெரிதும் உதவும். '1600' என்ற எண்ணில் இருந்து அழைப்பு வந்தால், அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனம் தான் என்பதை மக்கள் எளிதில் உணர்ந்து கொள்ள முடியும்.
புதிய விதி
யாருக்கெல்லாம் இந்தப் புதிய விதி பொருந்தும்?
மத்தியத் தொலைத்தொடர்புத் துறை (DoT), இந்த '1600' வரிசை எண்களை BFSI எனப்படும் வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறைக்காகவும், அரசு அமைப்புகளுக்காகவும் ஒதுக்கியுள்ளது. ஏற்கனவே, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), செபி மற்றும் பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் (PFRDA) ஆகியவற்றின் கீழ் வரும் நிறுவனங்களுக்கு இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இப்போது காப்பீட்டுத் துறையும் இதில் இணைக்கப்படுவதால், ஒட்டுமொத்த நிதித் துறையும் ஒரேப் பாதுகாப்பானக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வரப்படுகிறது.
பலன்
பொதுமக்களுக்கு என்னப் பலன்?
இந்த மாற்றத்தால் வாடிக்கையாளர்கள் இனி தேவையற்ற மார்க்கெட்டிங் அழைப்புகளுக்கும், அவசியமானச் சேவை அழைப்புகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை எளிதில் கண்டறியலாம். ஒரு வாடிக்கையாளர் தனது இன்சூரன்ஸ் பாலிசியைப் புதுப்பிக்கவோ அல்லது அதன் நிலையை அறியவோ வரும் அழைப்புகள் '1600' எனத் தொடங்கினால் மட்டுமே அவர் நம்பிக்கையுடன் பதில் அளிக்க முடியும். இது பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிப்பதோடு, நிறுவனங்கள் மீதான நம்பிக்கையையும் வளர்க்கும். தற்போது வரை சுமார் 570 நிறுவனங்கள் இந்த 1600 வரிசை எண்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன என்பதும், 3000க்கும் மேற்பட்ட எண்கள் இதற்காகச் சந்தா முறையில் வழங்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.