ட்விட்டருக்கு மாற்றாக வெளியானது 'த்ரெட்ஸ்': நான்கு மணி நேரத்தில் 5 மில்லியன் பயனர்கள் இணைந்து சாதனை
ட்விட்டருக்கு மாற்றாக பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா களமிறங்கியுள்ள புதிய தளமான 'த்ரெட்ஸ்', வியாழக்கிழமை (ஜூலை 6) அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு மணி நேரத்திற்குள், 5 மில்லியன் பதிவிறக்கங்களைப் பெற்றது. மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்டு வரும் அப்டேட்டில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். த்ரெட்ஸ் தளத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு, ட்விட்டரை விட சிறப்பாக செயல்படுமா என்ற விவாதம் கிளம்பியுள்ளது. குறிப்பாக, எலோன் மஸ்க் மற்றும் புதிய ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாக்கரினோ ட்விட்டரின் வணிகத்தை புதுப்பிக்க முயற்சிக்கும் நேரத்தில், இது த்ரெட்ஸ் தளத்திற்கு ஒரு நன்மையாக இருக்கும் என்று சிலர் கூறுகிறார்கள்.
த்ரெட்ஸ் குறித்து மார்க் ஜுக்கர்பெர்க்
ட்விட்டரை விட த்ரெட்ஸ் பெரிதாக மாறுமா என்ற கேள்விக்கு பதிலளித்த மார்க் ஜுக்கர்பெர்க், "இதற்கு சிறிது காலம் எடுக்கும். ஆனால் 1 பில்லியனுக்கும் அதிகமான மக்களுடன் ஒரு பொது உரையாடல் செயலி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்". "ட்விட்டருக்கு இதைச் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் செய்யவில்லை. நாங்கள் செய்வோம் என நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, த்ரெட்ஸை "உரையாடலுக்கான திறந்த மற்றும் பொதுவெளியாக" அறிமுகப்படுத்தினார், மார்க். "இன்ஸ்டாகிராமின் சிறந்த பகுதிகளை கொண்டு, ஒரு புதிய அனுபவத்தை உருவாக்குவதே யோசனை" என்றும் அவர் கூறினார். சுவாரஸ்யமாக 11 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது மீண்டும் ட்விட்டரில் அக்கௌன்ட் திறந்த ஜுக்கர்பெர்க், த்ரெட்ஸ் வெளியீட்டிற்குப் பிறகு, 1967ஆம் ஆண்டு வெளியான ஸ்பைடர் மேன் கார்ட்டூனை வெளியிட்டுள்ளார்.