ஆன்லைன் கேமிங் துறையை 28% GST எப்படி பாதிக்கும்?
ஆன்லைன் கேமிங் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறையாகும். இணையம் வழியாக வணிகம் செய்து அதிக லாபம் ஈட்டும் ஒரு துறையாகவும் இது இருந்து வருகிறது. எனினும், சமீபத்தில் இந்திய அரசாங்கம் ஆன்லைன் கேமிங்கிற்கு மறைமுகமாக விதித்திருக்கும் வரிகளால் இந்த வளர்ச்சி பாதிக்கப்படலாம். கேமிங் நிறுவனங்கள் பயனாளர்களிடம் இருந்து வசூலிக்கும் நிதிகளுக்கு 28% வரி கட்ட வேண்டும் என்று சரக்கு மற்றும் சேவை வரி(GST) கவுன்சில் அறிவித்துள்ளது. இதனால், ஆன்லைன் கேமிங் துறை கடுமையாக பாதிக்கப்படும் என்கின்றனர் நிபுணர்கள். கடந்த 5 ஆண்டுகளில், இந்திய கேமிங் துறை உள்நாட்டு மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களிடமிருந்து $2.8 பில்லியன் திரட்டியுள்ளது.
வளர்ந்து வரும் பல இந்திய 'ஸ்டார்ட்அப்'கள் பாதிக்கப்படும்
2022ஆம் ஆண்டில் மட்டும் ஆன்லைன் கேமிங் துரையின் வருவாய் 35% வளர்ச்சியடைந்திருந்தது. இது 2025 ஆம் ஆண்டிற்குள் $2 பில்லியனைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதற்கிடையில், பயனாளர்கள் செலுத்தும் பணத்திற்கு 28% GST விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஆன்லைன் கேமிங் விளையாடும் பொதுமக்கள் தான் இந்த வரியை மறைமுகமாக செலுத்த வேண்டி இருக்கும். அதிகமாக பணம் செலவழிக்க வேண்டி இருப்பதால், பயனாளர்கள் சட்ட விரோதமான மாற்று தளங்களை தேட வாய்ப்பிருக்கிறது. அப்படி அவர்கள் செய்தால், வளர்ந்து வரும் பல இந்திய 'ஸ்டார்ட்அப்'கள் பாதிக்கப்படும். வெளிநாட்டில் இருந்து இயங்கும் கேமிங் தளங்கள் இந்தியாவில் தழைத்தோங்க தொடங்கும். இதனால், இந்திய வேலைவாய்ப்பு, உள்நாட்டு வணிக வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.