
"தொழில்நுட்பத்தின் பணி மனிதர்களின் வேலைப்பளுவைக் குறைப்பதற்கே": பில் கேட்ஸ்!
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் வேகமான வளர்ச்சி, மனிதர்களுக்கு மாற்றாக தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுமா என்ற பயத்தையும் சேர்த்து வளர்த்து வருகிறது.
இதனை ஆமோதிக்கும் வகையிலேயே, சாட்ஜிபிடியை உருவாக்கி ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால், உலகின் முன்னாள் பணக்காரரான பில்கேட்ஸ் இதற்கு சற்று மாறான பதிலைத் தந்திருக்கிறார். தென்னாப்பிரிக்க நகைச்சுவையாளரும், எழுத்தாளருமான ட்ரெவர் நோவாவின் 'வாட் நௌ' பாட்காஸ்டில், தொழில்நுட்பம் குறித்த தன்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறார் பில் கேட்ஸ்.
தொழில்நுட்பம் மட்டுமின்றி, வேலை மற்றும் வாழ்க்கைக்கான அர்த்தம் எனப் பல்வேறு விஷயங்களில் தான் கொண்டிருக்கும் கருத்துக்களை அந்த பாட்காஸ்டில் பகிர்ந்திருக்கிறார் அவர்.
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம் மனிதர்களுக்கு மாற்றானது அல்ல:
பில் கேட்ஸ் பேசியதன் சாரம்சம் இதுதான், "தொழில்நுட்பம் எப்போதும் மனிதர்களுக்கு மாற்றானது அல்ல. அது எப்போதும் மனிதர்கள் உதவி செய்யும் ஒரு கருவி மட்டுமே. தொழில்நுட்பத்தால் மனிதர்கள் பார்க்கும் வேலைகள் பறிபோகாது, மாற்றாக அவர்களது வேலைப்பளு குறையும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், " எப்போதும் வாழ்க்கைக்கு கடின உழைப்பு மட்டுமே அவசியமில்லை. வேலை பார்த்துக் கொண்டிருப்பது மட்டுமே வாழ்க்கையும் இல்லை. வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே வேலை பார்த்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டால், அதனை ஏற்றுக் கொள்வதிலும் எந்தத் தப்பும் இல்லை" எனப் பேசியிருக்கிறார் அவர்.
இயந்திரங்களும், தொழில்நுட்பமும் மனிதர்களின் கடினமான வேலைகளை சுலபமாக்க உருவாக்கப்பட்டவை., நமக்கு மாற்றாக அல்ல. இது தான் பில் கேட்ஸின் கருத்து.