ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 16.6 லட்சம் ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வாங்கிய நபர்!
சென்ற ஆண்டின் விற்பனை விபரங்களை, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் 2022 அறிக்கை மூலம், அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. அதில் பல சுவாரஸ்ய விபரங்கள் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டில், டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய மூன்று நகரவாசிகள் மட்டுமே, 5 கோடிக்கு மேல் ஆர்டர் செய்துள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டியின் போது அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட பொருள் பால் ஆகும். குர்கானைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் இன்ஸ்டாமார்ட்டில் 1,542 முறை மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்து, 2022 ஆம் ஆண்டின் சிறந்த வாடிக்கையாளராக தேர்வாகியுள்ளார். அவர் அதிகமாக வாங்கிய பொருட்கள் நூடுல்ஸும், பாலும் ஆகும்.
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் 2022 அறிக்கை
பெங்களூரை சேர்ந்த ஒரு நபர் 16.6 லட்சம் ரூபாய்க்கு மளிகைப் பொருட்களை வாங்கி, இந்த ஆண்டில், இன்ஸ்டமார்ட் மூலம் அதிகம் செலவு செய்த நபராக கருதப்படுகிறார். இந்திய முழுமைக்கும், டீ மற்றும் காபி வகையறாக்கள் தான் அதிகமாக வாங்கப்பட்ட பொருளாகும். பழங்கள் மற்றும் காய்கறிகளில், வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி, தர்பூசணி, வாழைப்பழங்கள் மற்றும் இளநீர் ஆகியவை அதிகம் ஆர்டர் செய்யப்படுள்ளன. டிராகன் ஃப்ரூட், பெர்ரி, வூட் ஆப்பிள் போன்ற அரியவகை பழங்கள் 17 லட்சம் கிலோவுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. அசைவ உணவுகளில், கோழி இறைச்சிதான் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட வகை எனவும், பெங்களூரு நகரம் தான் அதிக ஆர்டர்களை ஈர்த்தது எனவும், அடுத்தாக ஹைதெராபாத் மற்றும் சென்னை மாநகரம் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.