ஸ்விக்கி நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி - 380 ஊழியர்கள் பணி நீக்கம்!
பிரபல உணவக டெலிவரி தளமான ஸ்விக்கி நிறுவனம் 380 பேரை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. ஸ்விக்கி நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கை வெளியான போதே அதிகப்படியான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனக் கணிக்கப்பட்ட நிலையில் தற்போது 380 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் சுமார் 8-10 சதவீத ஊழியர்களை இந்தப் பணிநீக்க திட்டத்தின் கீழ் குறைகிறது. மேலும், ஸ்விக்கி நிறுவனத்தின் நஷ்டம், கடந்த நிதியாண்டில் 1,617 கோடி ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் 3,629 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
சொமோட்டோவை தொடர்ந்து 380 ஸ்விக்கி ஊழியர்கள் பணி நீக்கம்
இதுகுறித்து ஸ்விக்கி தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீஹர்ஷா மஜேடி, ஆட்குறைப்புக்கு மன்னிப்பு கோரியுள்ளார். மறுசீரமைப்பு பயிற்சியின் ஒரு பகுதியாக மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். லாபம் சரிந்தது தான் ஸ்விக்கி இந்த ஆட்குறைப்பு காரணம் எனக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு 3 முதல் 6 மாதம் வரை ஊதியம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். ஸ்விக்கியின் சக போட்டி நிறுவனமான சொமேட்டோ நிறுவனமும் நவம்பர் மாதத்தில் செலவுகளைக் குறைக்கவும், வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்யவும் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 3 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.