எனக்கு உதவுங்கள்! மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட இந்தியர்கள் உருக்கம்
மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்து இருந்தது. இந்த பணி நீக்கத்திற்கு பல ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து கண்ணீர் விட்ட நிலையில், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாடெல்லா ஒரு நீண்ட கடிதத்தை அறிக்கையாக வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில், பொருளாதார மந்த நிலை காரணமாக இப்படி ஒரு முடிவினை எடுத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார். தற்போது பணி நீக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வரப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பணி நீக்க நடவடிக்கையில், 21 ஆண்டுகளுக்கு பிறகு தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக ஒரு இந்தியர் வருத்தத்தை பகிர்ந்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலையை இழந்த இந்தியர்கள் உருக்கம்
அதில், "எனது கல்லூரி படிப்புக்கு பின்பு என் முதல் வேலை மைக்ரோசாப்ட்டில் தான். நான் வெளிநாட்டுக்கு வந்தது இன்னும் நினைவில் உள்ளது. 21 ஆண்டுகள் இங்கு பணிபுரிந்துள்ளேன். பல பதவிகளை வகித்துள்ளேன். எனக்கு இது மிகுந்த மன நிறைவை அளிக்கிறது" என லிங்க்ட் இன் பக்கத்தில் பிரசாந்த் கமணி என்பவர் தெரிவித்துள்ளார். மேலும், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றும், நிறுவனத்திடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன் எனவும் தெரிவித்தார். மற்றொரு ஊழியர் தெரிவிக்கையில், வேலை இழப்பால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இப்போது விசாவில் இருப்பதாகவும், இன்னொரு வேலையைத் தேட குறைந்த நேரமே உள்ளது எனக்கு உதவுங்கள் என லிங்க்ட் இன்னில் உதவி கோரி பதிவிட்டுள்ளார்.