Year Ender 2025: ரன்வீர் சிங் முதல் கமல்ஹாசன் வரை சர்ச்சையில் சிக்கிய பிரபலங்கள்
செய்தி முன்னோட்டம்
2025 ஆம் ஆண்டு, குறுகிய வீடியோக்கள், திரிக்கப்பட்ட விவாதங்கள், மீம்ஸ்கள் மற்றும் AI ஆகியவற்றால் இயக்கப்படும் சமூக ஊடகங்கள், திரை பிரபலங்களுக்கு ஈடாக பொது நபர்களை சம அளவில் கொண்டாடுவதையும், அவர்களை தாக்குவதையும் எளிதாக்கின. 2025-ஆம் ஆண்டு இந்திய திரையுலகிற்கு பல வெற்றிகளை தந்தாலும், சில முன்னணி நட்சத்திரங்கள் தங்களது செயல்கள் மற்றும் பேச்சுகளால் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகினர். கலாச்சார தவறுகள் முதல் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வரை, இந்த ஆண்டின் மிகவும் ட்ரோல் செய்யப்பட்ட சில 'சர்ச்சை நாயகர்கள்' மற்றும் அவர்களுக்குக் கிடைத்த பின்னடைவுக்கான காரணங்களை இங்கே பார்ப்போம்.
கமல்ஹாசன்
கமல்ஹாசன்: மொழிப் போர் சர்ச்சை
தனது 'தக் லைஃப்' (Thug Life) திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியின் போது, "கன்னட மொழி தமிழிலிருந்து பிறந்தது" என்று கமல் கூறிய கருத்து கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கன்னட மொழி அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன. இதனை தொடர்ந்து, கன்னட மொழியை இழிவுபடுத்தும் வகையில் பேசக்கூடாது என நீதிமன்றம் அவருக்குத் தடை விதித்தது. பின்னர், தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கூறி கமல்ஹாசன் விளக்கம் அளித்தார்.
ரன்வீர் சிங்
ரன்வீர் சிங்: 'காந்தாரா' படத்தின் இயக்குனரை கிண்டலடித்தார்
இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் (IFFI), 'காந்தாரா' திரைப்படத்தின் நடிகர் மற்றும் இயக்குனரான ரிஷப் ஷெட்டியை பாராட்டுகிறேன் பேர்வழி என படத்தின் முக்கிய காட்சியை ரன்வீர் சிங் கிண்டல் செய்யும் வகையில் நடித்துக் காட்டினார். அதோடு படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தெய்வ வழிபாட்டை 'பிசாசு' என தவறாக குறிப்பிட்டதும் சர்ச்சையானது. இது அந்தப் படத்தின் கலாச்சார விழுமியங்களை இழிவுபடுத்துவதாகக் கூறி சமூக வலைதளங்களில் ரன்வீர் கடுமையாக தாக்கப்பட்டார். நிலைமை மோசமானதைத் தொடர்ந்து, அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
மிருணாள் தாக்கூர்
மிருணாள் தாக்கூர்: உருவக் கேலி
நடிகை பிபாஷா பாசுவின் தோற்றம் குறித்து மிருணாள் தாக்கூர் முன்பு பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலானது. அதில் பிபாஷாவை 'ஆண்பால் தோற்றம் கொண்டவர்' என மிருணாள் தாக்கூர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், "அது 19 வயதில் நான் செய்த முட்டாள்தனம்" என மிருணாள் மன்னிப்புக் கோரினார்.
ரன்வீர் அல்லாபாடியா
ரன்வீர் அல்லாபாடியா (BeerBiceps): சர்ச்சைப் பேட்டி
தனது பாட்காஸ்ட் மற்றும் 'இந்தியாஸ் காட் லேடென்ட்' நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளரிடம் ஆபாசமான மற்றும் தகுதியற்ற கேள்வியை கேட்டதற்காக பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சமூக வலைதளங்களில் அவர் இந்த ஆண்டு அதிகப்படியான கிண்டலுக்கு ஆளானார்.