சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சிக்கல்; ஸ்பேஸ்எக்ஸ் உடன் நாசா பேச்சுவார்த்தை
நாசா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களை இன்னும் சில காலம் அங்கேயே தங்கியிருக்க வைக்க நாசா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாசா போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் கடந்த ஜூன் 6 அன்று சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது. அவர்கள் விரைவில் பூமிக்கு திரும்புவார்கள் என்று கூறப்பட்ட நிலையில், விண்கலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கலால் அவர்கள் அங்கேயே தொடர்ந்து தங்கியுள்ளனர். அவர்கள் பூமிக்கு திரும்புவது தாமதமாகும் நிலையில், அவர்கள் திரும்பும் வரை ஸ்பேஸ்எக்ஸ் உடன் பணிபுரிவது உள்ளிட்ட பல்வேறு விருப்பங்களை நாசா ஆய்வு செய்து வருகிறது.
சுனிதா வில்லியம்ஸ் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்ய நாசா முயற்சி
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் பாதுகாப்பாக பூமிக்கு திரும்புவதை உறுதி செய்வதற்கான சாத்தியமான அனைத்து விருப்பங்களையும் ஆராய்ந்து வருவதாக நாசா அறிவித்துள்ளது. வியாழனன்று (ஆகஸ்ட் 8) ஒரு ஊடக உரையாடலில் இது குறித்து பேசிய நாசாவின் வணிகக் குழு திட்டத்தின் மேலாளர் ஸ்டீவ் ஸ்டிச், விண்வெளி வீரர்களை அவர்கள் சென்ற அதே ஸ்டார்லைனரில் மீண்டும் கொண்டு வருவதே முதன்மைத் திட்டம் என்றாலும், மாற்று உத்திகள் ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். இந்த திட்டம் தோல்வியில் முடிந்தால், அவர்களை ஸ்பேஸ்எக்ஸின் க்ரூ 9 குழுவுடன் இணையச் செய்து அடுத்த ஆண்டு பிப்ரவரில் பூமிக்கு திரும்ப அழைத்து வரவும் ஸ்பேஸ்எக்ஸ் குழுவுடன் நாசா ஆலோசித்து வருவதாகவும், அவர் கூறியுள்ளார்.